மாலத்தீவில் பாராளுமன்றத்தை ராணுவம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது

மாலே,

மாலத்தீவில் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட ஒன்பது பேரை விடுவிக்குமாறு அரசுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. 9 பேர் மீதும் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியது. மேலும், அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் தலைமையிலான மாலத்தீவு முன்னேற்றக் கட்சியிலிருந்து விலகிய 12 எம்.பி.க்களின் தகுதி நீக்கம் செல்லாது எனவும் உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து, அந்த 12 பேருக்கும் மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டிய சூழல் நாடாளுமன்றத்துக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால் 12 பேருக்கும் எம்.பி. பதவி வழங்கப்பட்டால், அவர்களுடன் இணைந்து எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலம் பெற முடியும் எனவும், அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அவரை தகுதி நீக்கம் செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து பாராளுமன்றத்தை காலவரையின்றி முடக்குவதாக மாலத்தீவு அரசு அறிவித்தது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க உத்தரவிட்டும், விடுவிக்காத அரசை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் பாராளுமன்றத்தை ராணுவம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உள்ளது.

-dailythanthi.com