டைனோசர்கள்: வளர்ச்சியே வீழ்ச்சிக்கு வழிவகுத்ததா?

டைனோசர்கள் தங்களின் வளர்ச்சியில் கண்ட வெற்றியே அதனை வீழ்ச்சியடைய செய்வதாக இருந்திருக்கலாம் என்று உலகம் முழுவதும் டைனோசர்கள் பரவியது பற்றிய ஆய்வு காட்டுகிறது.

விண்கல் டைனோசர்களை தாக்கிய சம்பவத்திற்கு முன்னரே அவற்றின் வளர்ச்சி வீழ்ச்சியடைய தொடங்கியிருந்தது என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த டைனோசர்கள் பூமியிலுள்ள வசிப்பிடம் எல்லாவற்றையும் ஆக்கிரமித்து இருந்ததே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

தென் அமெரிக்காவில் தோன்றியதில் இருந்து, இந்த கிரகத்தையே நிரப்பிவிடும் வகையில் விரைவாகவும், வேகமாகவும் டைனோசர்கள் பரவின.

கொடூரமான டி.ரெக்ஸில் இருந்து மிக பிரமாண்டமான நீண்ட கழுத்துடைய டிப்லோடோகஸ் வரையான நூற்றுக்கணக்கான வித்தியாசமான டைனோசர்கள் தோன்றின.

விண்கல் விழுந்து டைனோசர்களை தாக்கி அழிப்பதற்கு முன்பே, பூமியில் இடமில்லாமல் போய்விட்டதால், அவை அழிய தொடங்கியிருந்தன.

‘நேச்சர் எக்காலஜி மற்றும் எவலூசன்’ என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, தென் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய டைனோசர்களின் வழியை மீண்டும் சுட்டிக்காட்டுகிறது.

“டைனோசர்கள் மிகவும் விரைவாக பரவி பூமியின் எல்லா பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்தன” என்று இந்த ஆய்வின் இணை ஆய்வாளர் ரீடிங் பல்கலைக்கழகத்தை சோந்த டாக்டர் கிறிஸ் வென்டிற்றி தெரிவித்தார்.

டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்னால் ஏற்பட்ட ‘மாபெரும் இறப்பு’ என்று அறியப்படும் ‘முழு அழிவு’ விட்டு சென்றிருந்த ஒரு வெற்றிடத்தை, டைனோசர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

பேரழிவுக்கு உட்பட்டிருந்த கிரகம் முழுவதும், பரவலாகுவதற்கு இருந்த எல்லா வகையான வாய்ப்புக்களையும் பயன்படுத்தி, பூமி முழுவதும் பரவின. பிற விலங்குகளிடம் இருந்து உணவு, இடம் அல்லது மூலவளங்களுக்கு போட்டியே இல்லாமல் டைனோசர்கள் பரவலாக முடிந்தது.

ஆனால், அவற்றின் வாழ்க்கை காலத்தின் இறுதியில், அவை எல்லா இடங்களுக்கும் தங்களை தகவமைத்து கொண்ட பின்னர், இந்த முன்னேற்றம் மெதுவாகியது.

பறவை டைனோசர்கள் மட்டுமே உயிர் தப்பி, இப்போதை பறவைகள் என்று அறியக்கூடியவை உருவாக்கியுள்ளன.

“அவை பூமியை நிறைத்திருந்தன. நகருவதற்கு கூட இடம் இருக்கவில்லை. அவை தாங்கள் தங்கியிருந்த இடங்களில் வாழ்வதற்கு சிறப்பியல்புகளை பெற்றிருந்தன. எனவே, அவற்றால் புதிய உயிரினங்களை இனப்பெருக்கம் செய்யவும் முடிந்தது என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சியரா ஒ’டோநோவான் தெரிவித்துள்ளார்.

பறவைகள் தவிர பிற அனைத்து உயிரினங்களுக்கும் இது இறப்பின் கடைசிப் புள்ளியாக இருந்திருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு டைனோசரும், அதன் மூதாதையரும் உலகில் எங்கு வாழ்ந்தன என்பதை முன்று கோணங்களில் வழங்கும் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒழுங்கற்ற மற்றும் முழுமையற்ற புதைப்படிவ சான்றுகளை மட்டுமே ஆய்வு செய்வதைவிட முழுமையான வடிவத்தை இது வழங்குகிறது.

விண்கல் பூமியை தாக்குவதற்கு முன்னரே டைனோசர்கள் வீழ்ச்சியை கண்டிருந்தன என்ற கருத்தை எல்லா ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

“கண்டங்கள் சிறிய தொகுதிகளாக பிரிந்தபோது, கிரிடோஸ் (135 மில்லியன் ஆண்டுகள் முதல் 63 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை) காலம் முழுவதும் டைனோசர்கள் தொடர்ச்சியாக வேறுபட்டு பரிணாம வளர்ச்சி கண்டன” என்கிறார் இந்த ஆய்வில் தொடர்பில்லாத போட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் மார்டில்.

இந்த விண்கல் தாக்கிய பாதிப்புக்கு சற்று முன்பு வரை கிரிடோஸ் (135 மில்லியன் ஆண்டுகள் முதல் 63 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை) காலத்தின் முடிவு வரை டைனோசர்கள் இன்னும் வேறுபட்டு பரிணாம வளர்ச்சி கண்டன” என்று அவர் தெரிவித்துள்ளார். -BBC_Tamil