ஸ்காட்லாந்து போலீஸை அலறவிட்ட ‘புலி’ பொம்மை

ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன்ஷர் பண்ணையில் புலி ஒன்று சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலையடுத்து ஆயுதமேந்திய போலீசார் அனுப்பபட்ட நிலையில், அது வெறும் பொம்மை புலி என்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு, அபெர்டீன்ஷரை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மாட்டு கொட்டகையில் புலி ஒன்றை பார்த்ததாக பதற்றத்துடன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பல வாகனங்களுடன் ஆயுதமேந்திய போலீசார் ஹேட்டன் அருகிலிருக்கும் அந்த பண்ணைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், வன உயிரின பூங்கா ஒன்றை தொடர்பு கொண்ட போலீசார் அங்கு புலி எதேணும் தப்பியோடியுள்ளதா என்ற விவரத்தையும் கேட்டு விசாரித்துள்ளனர்.

இந்த தவறான எச்சரிக்கை, அதிகாரிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை வழங்கியதாக ஸ்காட்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது வழக்கத்துக்கு மாறான புகார் என்றாலும் பொதுமக்களுக்கு சாத்தியமான அபாயத்தை அறிவிக்கும் எந்தவொரு அழைப்பும் தீவிரமாக எடுத்துகொள்ளப்படும் என்று ஆய்வாளர் ஜார்ஜ் கார்டினர் கூறியுள்ளார்.

மேலும், இதுப்போன்ற சூழ்நிலைகளில் ஆயுதமேந்திய அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்புவதென்பது ஒரு வழக்கமான நடைமுறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான நடவடிக்கைகள் சுமார் 45 நிமிடங்களுக்குள் முடிவுக்கு வந்ததாகவும், நல்ல நோக்கத்துடன் தவறான தகவல் புகாராக கூறப்பட்டது என ஜார்ஜ் கூறியுள்ளார். -BBC_Tamil