தென் கொரியா சென்றடைந்தார் வட கொரிய தலைவரின் தங்கை

வட கொரியாவின் உயரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் தங்கை கிம் யோ-ஜாங் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பியோங்சாங் சென்றடைந்துள்ளார்.

1950-1953 இல் நடைபெற்ற கொரியப் போருக்குப் பின், தென்கொரியாவிற்கு செல்லும் வட கொரியாவை ஆளும் குடும்பத்தின் முதல் நேரடி உறுப்பினர் கிம் யோ-ஜாங் ஆவார்.

கடந்த ஆண்டு கட்சியின் போலிட்பீரோவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினரான கிம் யோ-ஜாங் மற்றும் வட கொரியாவின் அரசு விழாக்களின் துறைத் தலைவரான கிம் யோங்-நம் ஆகிய இருவரும், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பியோங்சாங் சென்றடைந்தார்கள்.

வட கொரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் இருக்கும் தொடர்புகள் காரணமாக கிம் யோ-ஜாங் அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

30 வயதான கிம் யோ-ஜாங், மறைந்த தலைவர் கிம் ஜாங்-இல்லின் இளைய மகளும், கிம் ஜாங்-உன்னின் தங்கையும் ஆவார்.

கிம் ஜாங்-உன்னை விட 4 ஆண்டுகள் இளையவரான இவர், தன்னுடைய சகோதரருக்கு மிகவும் நெருங்கியவர் என்று கூறப்படுகிறது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா கலந்து கொள்வது இருதரப்பு உறவுகளில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் என்று கருதப்படுகிறது.

தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன்னிற்கு தங்கை மூலமாக முக்கியமான செய்திகளை வடகொரிய அதிபர் அனுப்பலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது.

இரு கொரிய நாடுகளும் தொடக்க நிகழ்ச்சியில் ஒரு கொடியின் கீழ் அணி வகுத்துச் செல்லும்.

இருப்பினும், இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை வட கொரியா பரப்புரை நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதாக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிற நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. -BBC_Tamil