செளதி பெண்கள் முகத்தையும், உடலையும் முழுமையாக மறைக்கும் ஃபர்தா அணியத் தேவையில்லை என்று முதன்மை மதபோதகர்களில் ஒருவரான ஷேக் அப்துல்லா அல் முட்லாக் கூறி உள்ளார்.
பெண்கள் எளிமையான உடைகளை அணியவேண்டும். அதற்காக ஃபர்தா அணிய வேண்டும் என்று அர்த்தம் இல்லை என்று கூறியுள்ள அவர் மூத்த அறிஞர்கள் சபையின் உறுப்பினராக உள்ளார்.
சட்டம் என்ன சொல்கிறது?
செளதி சட்டத்தின்படி பெண்கள் அனைவரும் ஃபர்தா அணிய வேண்டும்.
செளதி தனது சமூகததை நவீனமாக்கவும், பெண்கள் சம்பந்தமான இறுக்கமான சட்டங்களை தளர்த்தவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ள இந்த சூழலில் மூத்த மத ஆறிஞர் ஒருவர் இவ்வாறாக கூறி உள்ளார்.
இஸ்லாமிய மார்க்கம் மீது பற்று கொண்ட உலகம் முழுவதிலும் உள்ள 90 சதவீத முஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணிவதில்லை. நாம் பெண்களை ஃபர்தா அணியக் கோரி கட்டாயப்படுத்தக் கூடாது என்கிறார் ஷேக் முட்லாக்
இஸ்லாமிய அறிஞர்களிடமிருந்து இது போன்ற குரல் வருவது இதுதான் முதல்முறை. இது எதிர்காலத்தில் செளதியில் சட்டமாக மாறலாம்.
எதிர்வினை என்ன?
ஷேக்கின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் மக்கள் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.
மஷரி காம்டி, “ஃபர்தா அணிவது எங்கள் பகுதியில் பாரம்பர்யம் சார்ந்த ஒன்று. அது மதம் சார்ந்தது இல்லை,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தலைநகர் ரியாத்தின் முக்கிய சாலை ஒன்றில், 2016 ஆம் ஆண்டு ஃபர்தாவை நீக்கியதற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டார் என்கிறது ராய்ட்டர்ஸ்.
இந்த விவாதம் இப்போது ஏன்?
செளதியை நவீனமாக்க அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அதற்காக விஷன் 2030 திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறார். இத்திட்டம், பெண்கள் தொடர்பான இறுக்கமான சட்டங்களை தளர்த்த உறுதி பூண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்கள் வாகனம் ஓட்டக் கூடாது என்ற தடை நீக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், கால்பந்தாட்டப் போட்டியை மைதானத்தில் நேரடியாகப் பார்க்க பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
செளதியில் பெண்கள் என்னவெல்லாம் செய்ய முடியாது?
பெண்களுக்கு எதிரான பல தடைகள் தற்போது மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வந்தாலும், செளதியில் பெண்கள் பல விஷயங்களை ஆண்களின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது.
அவை,
- பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல்
- வெளிநாட்டுப் பயணம்
- திருமணம்
- வங்கிக் கணக்கு தொடங்குதல்
- வியாபாரம் தொடங்குதல்
செளதி வஹாபிஸத்தை பின்பற்றி வருகிறது. இதன்படி, அங்கு பெண்கள் ஆண்கள் துணையுடன்தான் பயணம் செய்ய வேண்டும்.
இது போன்ற இறுக்கமான சட்டங்களால், அந்த நாடு பாலின சமத்துவமற்ற நாடாகப் பார்க்கப்படுகிறது.
-BBC_Tamil