போகோ ஹராம் இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிபோக் பகுதியில் இருந்து 200க்கும் அதிகமான பள்ளி மாணவிகள் கடத்தப்பட்ட வழக்கில் முதல் முறையாக ஒரு நபர் தண்டிக்கப்பட்டுள்ளார் என்று நைஜீரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
ஹருணா யாகாயா எனும் அந்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் வியாபாரியான அவர் கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தலில் பங்கேற்க வைக்கப்பட்டதாக வாதிட்ட அவரது வழக்கறிஞர் தண்டனையை குறைக்குமாறு முறையிட்டார்.
நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் 2014இல் நடந்த அந்த கடத்தல் சம்பவம் சர்தேச அளவில் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது. பல பெண்கள் போகோ ஹராம் பிடியில் இருந்து தப்பி வந்தாலும், நூற்றுக்கும் மேலானவர்களின் நிலை தெரியவில்லை.
போகோ ஹராம் குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்டுவரும் ஆயிரத்துக்கும் மேலானவர்கள் நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள சிறப்பு அமைப்பின் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். -BBC_Tamil