வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதம்… மருத்துவமனையில் டிரம்ப் மருமகள்

வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதத்தை திறந்து பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மான்ஹாட்டனில் உள்ள டிரம்பின் மூத்த மகனான ஜூனியர் டிரம்பின் வீட்டிற்கு உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை அவரது மனைவி வனிசா திறந்து பார்த்துள்ளார். அதில் சந்தேகத்திற்குரிய வகையில் வெள்ளை பவுடர் இருந்துள்ளது.

விஷத்தன்மை இருக்கலாம் என்று சந்தேகித்த அவர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.

கடிதம்வந்த போது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்..

பாதிப்பு இல்லை

பிபிசியிடம் பேசிய நியூயார்க் காவல் துறை அதிகாரிகள், நாங்கள் அந்த வெள்ளை பவுடரை ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில் விஷத்தன்மை எதுவும் இல்லை என்றனர்

மேலும் அவர்கள், ஜூனியர் டிரம்பின் மனைவிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார்கள்.

ஜூனியர் டிரம்புக்கு பாதுகாப்பு அளித்து வரும் ரகசிய பாதுகப்பு சேவை அமைப்பினர், வெள்ளை பவுடர் குறித்து விசாரித்து வருவதாக கூறினர்.

எதிர்ப்பை இப்படி தெரிவிப்பதா?

இது குறித்து ட்வீட் செய்த ஜூனியர் டிரம்ப், அச்சத்திற்குரிய இந்த சம்பவத்திற்கு பிறகு வனிசாவும், குழந்தைகளும் நலமாக உள்ளனர். எதிர்ப்பை இப்படி தெரிவிப்பது வெறுக்கதக்கதாக உள்ளது என்றார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மூத்த மகனிடம் பேசி உள்ளார்.

மாடல்

வனிசாவுக்கும், ஜூனியர் டிரம்புக்கும் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.வனிசா நியூயார்க்கில் ஃபேஷன் மாடலாக இருந்தவர். டொனால்ட் டிரம்ப்பின் வணிகங்களை தற்போது ஜூனியர் டிரம்ப்தான் கவனித்து வருகிறார்.

கடிதங்கள் மூலம் விஷதன்மை வாய்ந்த பொருட்களை அனுப்பி நோய் பரப்புவது 2001 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆந்த்ராக்ஸ் கிருமி இவாறு பரப்பப்பட்டதில் 5 பேர் இறந்தனர். -BBC_Tamil