ஏவுகணைகளை விட சக்திவாய்ந்த ஆயுதமாக பெண்களை பயன்படுத்தும் வட கொரியா

உலக கவனத்தை பெற வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஏவுகணைகளை ஏவ வேண்டியதில்லை. அதைவிட சக்திவாய்ந்த ஆயுதங்களை அவர் வைத்துள்ளார். அது, அவரது பெண் தூதர்கள்.

கிம் ஜாங்-உன் சமீபத்திய தூதர், ‘வசீகர தாக்குதல் நடத்தக்கூடியவர்’ என அழைக்கப்படும் அவரது சகோதரி கிம் யோ-ஜாங்.

கிம் யோ-ஜாங் தென் கொரிய தொலைக்காட்சி பார்வையாளர்களை வசீகரித்துள்ளார். தனது சகோதரரின் கடிதத்தை, தென் கொரிய அதிபரிடம் கிம் யோ-ஜாங் வழங்கியபோது, அவரை பற்றிய ஒவ்வொரு விஷயமும் தொலைக்காட்சியில் நேரலையாக ஆராயப்பட்டது.

அவரது பளபளக்கும் உடை, அவரது தலை முடியின் அமைப்பு, அவரது ஒவ்வொரு சிறிய சைகைகளும் விவாதிக்கப்பட்டது. மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்காவால் இவர் தடுப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடாமல், அவரது முகத்தில் இருக்கும் புள்ளிகளை பற்றி கூட சில தொலைக்காட்சிகள் விவாதித்தன.

வட கொரியாவின் ரகசிய ஆட்சிக்கு இந்தப் பெண் ஒரு முகம் கொடுத்துள்ளார்.

”இது விசித்திரமான மற்றும் அதிசயமானது. நான் ஒரு வட கொரிய நபரைப் பார்த்ததில்லை” என ஒரு நபர் கூறுகிறார்.

”அவரைப் பார்த்தபோது எனது இதயம் உருகியது” என மற்றொருவர் கூறுகிறார்.

கிம் யோ-ஜாங் வட கொரியாவின் விளம்பர ராணி என்பதை மறக்கக்கூடாது.

”கிம் குடும்பத்தில் இருந்து இப்படிப்பட்ட ஒரு பெண்ணை பார்ப்பது தென் கொரியர்களுக்கு அசாதாரணமான ஒன்று. தென் கொரியர்கள் இப்பெண்ணால் கவரப்பட்டது ஆச்சரியமானது அல்ல” என்கிறார் ஏபி செய்தி நிறுவனத்தின் பியோங்யாங்கில் அலுவலக முன்னாள் மேலாளர் ஜீன் லீ.

இந்த மயக்கம் சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியது. வட கொரியாவின் மோரான்போங் என்ற பெண்கள் இசைக்குழுவின் முன்னாள் தலைவியான ஹுன் சாங்-வோல், தென் கொரியாவில் பல ரசிகர்களைப் பெற்றார்.

அதன்பிறகு குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு நல்ல தோற்றமுடைய பெண்களைக் கொண்ட உற்சாகமூட்டும் பெண்கள் படையை வட கொரியா அனுப்பியது. குளிர்கால போட்டிகளின் போது, தங்களது அணியை இவர்கள் உற்சாகப்படுத்துவார்கள்.

தங்களது அழகுக்காகவும், திறமைக்காகவும் தேர்தேடுக்கப்பட்ட இப்பெண்கள், அழகிய ராணுவம் என அழைக்கப்படுகின்றனர்.

முன்பு வட கொரியாவின் உற்சாகமூட்டும் பெண்கள் படையில் இருந்து பிறகு அந்நாட்டில் இருந்து தப்பித்து சென்ற ஹுன் சாங்-வோல், ”வெளியே சென்று, தனது புன்னகையால் மற்றவர்களை ஈர்ப்பதே தனக்கு அளிக்கப்பட்ட வேலை” என்கிறார்.

”வட கொரியாவின் கொள்கைகளை நாங்கள் பரப்ப வேண்டும். முன்னரங்கில் இருக்கும் போராளிகள் நாங்கள். நாங்கள் எப்படி பெருமைப்படுகிறோம் என்பதைக் காட்டுவதற்காக எதிரியின் இதயத்தில் நுழைகிறோம். நாங்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்பதைக் காட்ட வேண்டும்” என்கிறார் ஹுன் சாங்-வோல்.

தனது சகோதரர் வட கொரியாவில் இருந்து தப்பித்து சென்றதால், ஹுன் சாங்-வோலும் வட கொரியாவில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருவேளை அவர் அங்கேயே இருந்திருந்தால், அவரும் அவரது குடும்பத்தினரும் சிறை சென்றிருக்க வேண்டும். தற்போது தென் கொரியாவில் வாழும் இவர், வட கொரியாவில் தனக்கு 3 மாதங்கள் அளிக்கப்பட்ட பயிற்சியை நினைவு கூர்கிறார்.

”தெரியாத இடத்தைப் பார்த்து அதிர்ச்சியடையக் கூடாது. ஒரு நிமிடத்திற்குக் கூட தாய் நாட்டை மறக்க கூடாது. ஜென்ரல் கிம்மிற்கு மரியாதை செலுத்த இருக்கிறோம் என்பதை மறக்கக்கூடாது என பயிற்சியில் கூறப்பட்டது” என்கிறார்.

குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் ஈர்ப்பு மையமாக வட கொரியாவின் உற்சாகமூட்டும் பெண்கள் படை இருக்கிறது. இந்த படைக்கு பார்வையாளர்களிடம் இருந்து பலத்த ஆதரவும் கிடைத்துள்ளன.

இந்த பெண்கள் மூலம் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை , வட கொரியா தனது பிரசாரத்திற்கு பயன்படுத்திக்கொள்வதாகத் தென் கொரியாவில் உள்ள பழமைவாத குழுக்கள் கூறுகின்றன.

தனது பிரசாரத்தை ஊக்குவிக்கவும், தனது நாடு மீது உள்ள சர்வதேச பார்வையை மேம்படுத்தவும் வட கொரியா இந்த உற்சாகமூட்டும் பெண்களை படையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற கவலைகள் உள்ளன.

-BBC_Tamil