கேப்டவுன் : ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் பதவி விலகும்படி சொந்த கட்சியினரே அழுத்தம் கொடுத்து வந்ததன் விளைவாக தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். பதவி விலகல் குறித்த அறிவிப்பை அவர் தொலைக்காட்சிகள் மூலம் வெளிப்படுத்தினார்.
தென்ஆப்ரிக்காவில் ஆட்சி நடத்தி வரும் ஆப்ரிக்க நேசனல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஜேக்கப் ஜூமா. தென்ஆப்ரிக்காவின் 4வது அதிபரான இவர் 2009 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பதவியில் இருந்த 9 ஆண்டு காலத்தில் பல்வேறு ஊழல்களைச் செய்ததாக அவர் மீது ஜூமா சார்ந்த ஆப்ரிக்க நேஷனல் காங்கிரஸ் கட்சியே குற்றம் சாட்டியது. எனவே அதிபர் பதவியில் இருந்து ஜேக்கப் ஜூமா விலக வேண்டும் என அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வந்தனர். அவர் பதவி விலகாவிட்டால் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெளியேற்றப்படுவார் எனவும் அந்தக் கட்சி அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் தான் பதவி விலகுவதாக ஜூமா அறிவித்துள்ளார்.
இது குறித்து 30 நிமிட தொலைக்காட்சி உரையில் பேசிய அவர், குடியரசின் அதிபர் பதவியில் இருந்து உடனடியாக நான் விலகுகிறேன் என கூறினார். ஆப்ரிக்க நேஷனல் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை எனக்கு அதிருப்தி அளிப்பதாக இருந்தாலும் கட்சியில் என்னால் பிளவு ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
என்னுடைய ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு சிறப்பான சேவைகளை செய்திருக்கிறேன் என்ற நிறைவு இருக்கிறது. எனினும் ஜேக்கப் ஜூமாவின் ஊழலுக்கு துணையாக இருந்ததாக சொல்லப்படும் இந்தியாவில் பிறந்த கோடீஸ்வரர் குப்தாவின் குடும்பத்திடம் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் தான் ஜேக்கப் ஜூமாவின் பதவி விலகல் அறிவிப்பு வந்துள்ளது. அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமாவின் பதவி விலகலையடுத்து தென்னாப்பிரிக்காவின் துணை அதிபரான சிரில் ராமபூசா இன்று அல்லது நாளை புதிய அதிபராக நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.