அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெரும் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாஸ் குரூஸ் என்று கூறப்படுகிறது.
இப்பள்ளியின் முன்னாள் மாணவரான இவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
பள்ளிக்கூடத்தின் உள்ளே துப்பாக்கிசூடு நடத்துவதற்கு முன்பு இவர் பள்ளி வளாகத்துக்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2012ஆம் ஆண்டில் கனெக்டிக்கட் மாநிலத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இது ஒன்றாகும்.
புரோவார்ட் கவுண்டியின் ஷெரீப்பான ஸ்காட் இஸ்ரேல் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தாக்குதல்தாரி பள்ளிக்கூட வளாகத்துக்கு வெளியே முதலில் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் மூவர் இறந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதன்பின்னர் தாக்குதல்தாரி பள்ளிக்கூடத்தில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 12 பேர் இறந்துள்ளனர்.
மேலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.
”இது ஒரு பேரழிவு சம்பவம். இதனை விவரிக்க வார்த்தைகளே இல்லை” என்று அவர் பின்னர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் தெரிவித்திருந்தார்.
இத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் சந்தேக நபராக கருதப்படும் குரூஸ் தாக்குதல் நடந்து அவர் பள்ளி வளாகத்தை விட்டு சென்ற ஒரு மணி நேரத்துக்கு பின்னர் போலீஸ் காவலில் அழைத்து செல்லப்பட்டதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. -BBC_Tamil