கேப் டவுன் ‘ஜிரோ டே’: தைப்பூசத்தை முன்னிட்டு தண்ணீர் வழங்கும் தமிழர்கள்

தென் ஆஃப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால், தைப்பூசக் காவடித் திருவிழாவை முன்னிட்டு, அங்கு வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தண்ணீர் வழங்கி வருகின்றனர்.

அங்கு நிலவும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் கை கழுவுவதற்குப் பதிலாக ரசாயன சுத்திகரிப்பான்களை பயன்படுத்துமாறும், வாரத்தில் ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் வாழ்வதற்குப் பழகிக்கொள்ளுமாறும் அரசு கோரியுள்ளது என அங்குள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆங்கிலேயர் காலத்தில் தென்ஆப்பிரிக்காவில் உள்ள கரும்பு தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக அங்கு வசித்துவருகின்றனர்.

‘ஒரு நாளைக்கு 50 லிட்டர் மட்டுமே ‘

தென் ஆஃப்ரிக்காவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள, சுமார் மூன்று கோடிக்கும் அதிகமானோர் வசிக்கும் கேப் டவுன் நகரத்தில் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் இரண்டு சதவீதத்தினர் வசித்து வருவதாக தென் ஆஃப்ரிக்க அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளாக மழை பொய்த்ததால், அணைகளில் நீர் தேக்கம் குறைந்து, கடுமையான வறட்சியை கேப் டவுன் சந்தித்து வருகிறது.

தண்ணீர் பயன்பாட்டை குறைப்பதற்காக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு நூறு லிட்டர் தண்ணீர் அளித்தவந்த நிலை மாறி தற்போது வெறும் 50 லிட்டர் மட்டுமே அளிக்கப்படும் என கேப்டவுன் நகராட்சி அறிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு புதன் கிழமையும்(waterless Wednesdays) தண்ணீர் இல்லாத நாளாக எண்ணி, மக்கள் தண்ணீர் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி அன்று கேப்டவுன்னில் எந்த குழாயிலும் தண்ணீர் வாராது என்றும் அந்த நாளை ‘ஸிரோ டே’ (Zero Day)என்றும் கேப்டவுன் நகராட்சி அறிவித்துள்ளது.

தைப்பூசத்திற்குத் தண்ணீர் காவடி

இந்நிலையில், தென் ஆஃப்ரிக்காவில் வசிக்கும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு, தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கும் கேப்டவுன் மக்களுக்கு உதவ தண்ணீர் பாட்டில்களைக் கோவில்களில் சேமித்து, தேவையானவர்களுக்கு அளிக்க முயற்சிகள் எடுத்துவருவதாக பிபிசி தமிழிடம் பேசிய கௌடெங் பகுதியில் உள்ள தமிழர் கூட்டமைப்பின் தலைவர் கோவலன் வீரமுத்து தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் தை மாதத்தின் போது ஏழை எளியோருக்கு உதவும் தமிழ் குடும்பங்கள், இந்த ஆண்டு தண்ணீர் பாட்டில்களை வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் இரண்டு பாட்டில்களை வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

”இதுவரை ஐந்து லிட்டர் அளவில், 6 ஆயிரத்து 500 பாட்டில்கள் சேகரித்துள்ளோம். அவை கேப்டவுனில் உள்ள கோயிலில் வைக்கப்படும். தேவைப்படுவோருக்கு உடனடியாக அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

தைப்பூச திருவிழாவின் ஒரு பகுதியாக தண்ணீர் வழங்குகிறோம். ஏழை, பணக்காரன் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் தண்ணீர் பஞ்சத்தின்போது தவிக்கும் மக்களுக்கு உதவுவதே முருகனுக்கு செய்யும் சேவையாக எண்ணுகிறோம்,” என்றார் கோவலன் வீரமுத்து.

‘கை கழுவாதே, குளிக்காதே’

வேலூரில் இருந்து கேப்டவுனில் குடியேறிய தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சுசீலா லோகநாதன், தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க உள்ளூர் மக்கள் என்ன செய்கிறார்கள் என விரிவாக பேசினார்.

”பொது இடங்களில் தண்ணீர் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. கேப் டவுன் விமான நிலையத்தில் உள்ள விழிப்புணர்வு பதாகைகளில் தண்ணீர் பஞ்சம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால், குறைந்த அளவு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. தண்ணீர் இல்லாததால், மால் போன்ற இடங்களில் கழிவறைகளை பயன்படுத்துவதை மக்கள் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். பள்ளிக்கூடங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் கட்டாயமாக தண்ணீர் கொடுத்து அனுப்பவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,”என்றார்.

தண்ணீர் மறுபயன்பாடு செய்வது ஊக்குவிக்கப்படுவது தொடர்பாக பேசிய அவர், ”குளியலறையில் இருந்து வெளியாகும் தண்ணீரை, கழிவறைக்கு பயன்படுத்துகிறோம். புதன் கிழமைகளில், குளிப்பதற்குப் பதிலாக ஒரு பெரிய துண்டில் தண்ணீரை நனைத்து, உடலை துடைத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவித்துள்ளார்கள். செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது அல்லது கார் போன்ற வண்டிகளை தண்ணீரில் கழுவுவதை தவிர்க்கிறோம்

உலகில் கடைசி சொட்டு தண்ணீரும் காலியாகப் போகும் நகரம் எது?

வீடுகளில் பாத்திரங்கள் கழுவும்போது, முதலில் எண்ணெய் கறைகளை காகிதத்தால் துடைத்துவிட்டு, பின்னர் குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு பாத்திரங்களை கழுவிக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்கிறார்.

தண்ணீர் இல்லாமல் வாழ்வது எப்படி?

உள்ளூர் வானொலி நிகழ்ச்சிகளில் தண்ணீர் இல்லாமல் சமைப்பது எப்படி, கழிவறைகளில் தண்ணீருக்கு பதிலாக மரத்தூளைப் பயன்படுத்துவது எப்படி போன்றவை ஒலிபரப்பப்படுகின்றன.

கேப்டவுன் நகராட்சி அதிகாரிகள் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை வெளியிடுகின்றனர்.

அதன்படி, கை கழுவுவதற்கு பதிலாக ரசாயன சுத்திகரிப்பான்களை பயன்படுத்தினால் ஒரு நாளில் ஒருவர் இரண்டு லிட்டர் நீரை சேமிக்கலாம் என்று கூறியுள்ளது.

குறிப்பாக ஒவ்வொருவரும் அவர்களின் வீடுகளில் குழாய்களில் இருந்து தண்ணீர் கசிவதை கட்டாயமாக நிறுத்தவேண்டும். தண்ணீர் கசிவதை கண்டறியும் வழிகள், சரிசெய்ய அழைக்கவேண்டிய உதவி எண்கள் நகராட்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. -BBC_Tamil