ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடங்கவுள்ள நிலையில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய தூதுவரின் பணியகத்தில் நேற்றுக்காலை நடந்த இந்தக் கூட்டத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
26 நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 40 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.
இந்தக் கூட்டத்தில், இம்மாதம் தொடங்கவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்கா விவகாரம் முக்கிய இடம் வகிக்கும் என்பதால், அது தொடர்பான நகர்வுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பிந்திய அரசியல் நகர்வுகள், அதனால், நல்லிணக்க செயற்பாடுகளில் ஏற்படக் கூடிய தாக்கங்கள், குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், “தேர்தல் முடிவுகளால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைக் காரணம் காட்டி, சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்குவதற்கு, அனைத்துலக சமூகம் .இடமளிக்கக் கூடாது என்றும், ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட சுமந்திரன், “ 2015ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் ஒரு சில விடயங்கள் தவிர, ஏனையவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியக சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த விடயத்தில் அரசாங்கத்தின் வேகம் போதாது.
இருக்கின்ற ஒருவருட காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் அனைத்துலக சமூகத்துக்குக் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் வேகம் இல்லை. இதில் காத்திரமான முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை.
அரசியலமைப்பு உருவாக்க பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக இங்கு வந்து சிறிலங்கா அரச தரப்பினர் கூறக்கூடும். ஆனால் அது முழுமைபெறவில்லை.
நல்லிணக்கம் விடயத்தில் சில நகர்வுகள் எடுக்கப்பட்டாலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை.
இந்த விடயங்களில் அரசாங்கம் தானே முன்வந்து ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற கடுமையான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளைக் காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது என சிறிலங்கா அரசாங்கம் கூறக்கூடும்.
ஆனாலும் முழுமையாக ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.” என தெரிவித்தார்.
அதேவேளை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகப் பிரதிநிதிகளுடம் சுமந்திரன் இரண்டு சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.
-puthinappalakai.net