ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றக் கோரி கையெழுத்துப் போராட்டம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், இந்த விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றக் கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பொது அமைப்புகளின் ஆதரவுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  வழங்கப்பட்ட 2 ஆண்டு காலஅவகாசத்தில் ஒரு ஆண்டு பூர்த்தியாகியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம், பொறுப்புக்கூறல் விடயத்தில் ஆரம்ப நடவடிக்கையைக் கூட இதுவரை மேற்கொள்ளவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இன்னமும் செயற்படுத்தப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனப் போராடுகின்ற மக்களும் கடந்த ஒரு ஆண்டாக  தெருக்களிலேயே இருக்கின்றனர்.

எனவே, சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட மேலதிக காலஅவகாசத்தை இடைநிறுத்தி, இந்த விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும்.

பாதுகாப்புச் சபை ஊடாக சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றில் முன்னிறுத்த வேண்டும்.

அல்லாவிடின் குறைந்த பட்சம் சிறிலங்காவுக்கான அனைத்துலக  விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றாவது உருவாக்கப்படவேண்டும் என வலியுறுத்தவுள்ளோம்.

இது தொடர்பாக, வீடு வீடாக சென்று மக்களின் கையெழுத்துகள் பெறப்பட்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: