வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் அன்பான வேண்டுகோள்

பிரத்தியேக மருத்துவமனைகள் மற்றும் வைத்திய ஆலோசனை நிலையங்களை நடத்துகின்ற அனைத்து. முகாமையாளர்களுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்….,

வட மாகாணத்தில் குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான நோயாளர்கள் தமக்கு உரிய வைத்திய உதவிகளை வெளிநோயாளர் பிரிவில் பெற்றுச் செல்கின்றார்கள்.

அதற்கு மேலதிகமாக வைத்தியசாலையில் தங்கியிருந்தும் சிகிச்சை பெற்று. வெளியேறுகின்றார்கள். இருந்தும் பல நோயாளர்கள் அல்லது விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

இதனைக் கட்டுப்படுத்த நாம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பொதுவாக மருத்துவர்கள் இரவு பகலாக மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை.
மாறாக வைத்திய அதிகாரிகள் பிரத்தியேக வைத்தியசாலைகளில் பணம் சம்பாதிக்கின்றார்கள். இலவச மருத்துவமனைகளில் அவர்களின் சேவைகள் திருப்திகரமாகக் கிடைக்கப் பெறுவதில்லை என்ற கருத்தே மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் தவறானது என்று நான் கருதுகின்றேன். வைத்திய நிபுணர்கள் பிரத்தியேக வைத்தியசாலைகளுக்கு செல்வது உண்மை. சில வைத்தியர்கள் நோயாளிகள் மீது போதிய கரிசனை காட்டாது இருக்கலாம்.

ஆனால் அவர்கள் தமது கடமைகளுக்கு மேலதிகமான நேரங்களிலேயே இவ்வாறான விசேட கடமைகளை ஆற்றி வருகின்றார்கள். இலவச மருத்துவமனைகளில் அவர்களின் சேவைகளை நான் நேரடியாகப் பெற்றவன்.
அவற்றினால் பயன் பெற்றவன். அந்த வகையில் அவர்களுக்கு எனது அங்கீகாரத்தை வழங்குவதில் எனக்குத் தயக்கமில்லை.

எம்முள் பலர் களியாட்ட நிகழ்வுகளிலும், உணவு விடுதிகளிலும் பொழுதுகளைக் கழிக்கின்ற போது வைத்திய நிபுணர்கள் நோயாளிகளை கவனிப்பதிலும் அவர்களுக்குரிய மருத்துவ சேவைகளை வழங்குவதிலும் முழு நேரத்தையும் செலவிடுகின்றார்கள்.

ஆனாலும் ஒரு சில தவறுகள் பிரத்தியேக வைத்திய நிலையங்களில் ஏற்பட்டிருப்பது அல்லது ஏற்படக்கூடிய சூழல்கள் காணப்படுவது மனவருத்தத்திற்குரியது.

வைத்திய நிபுணர்களும், ஏனைய வைத்திய அதிகாரிகளும் சிறப்பாக பணிகளில் ஈடுபடுகின்ற போதும் பிரத்தியேக வைத்திய நிலையங்களின் முகாமைத்துவப் பீடங்களின் கவனக்குறைவுகள் அல்லது பணம் மீட்டுதலே ஒரேயொரு குறிக்கோள் என்ற அவர்களின் மனோபாவம் தவறுகள் நடைபெற இடமளித்து விடுகின்றன.

தவறான மருந்து விநியோகம், பயிற்சியற்ற தாதியர்களை, பணியாளர்களை வேலைக்கமர்த்தல் போன்றவை நோயாளிகளை நிரந்தர ஊனர்களாக மாற்றிவிட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

எனவே பிரத்தியேக மருத்துவமனைகள் மற்றும் வைத்திய ஆலோசனை நிலையங்களை நடாத்துகின்ற அனைத்து முகாமைத்துவங்களுக்கும் ஒரு அன்பான வேண்டுதலை இந்த சந்தர்ப்பத்தில் விடுக்கலாம் என எண்ணுகின்றேன்.

உங்கள் கவனக்குறைவுகள் அல்லது பிழையான மருந்துப் பாவனைகள் அல்லது பயிற்சியற்ற அலுவலர்களை நியமித்தல் ஆகியன பல நோயாளர்களுக்கு நிரந்தர ஊனத்தை ஏற்படுத்த வழி அமைக்கின்றன.
வைத்திய நிபுணர்களுக்கும் அது அவப்பெயரைத் தேடித்தருகின்றது. ஆகையால் உங்கள் மருத்துவமனைகளின் சுத்தம், சுகாதாரம், தொற்று நீக்கிகளை உறுதிப்படுத்தல் போன்றவை 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

உங்கள் மருத்துவ நிலையங்களில் வழங்கப்படுகின்ற மருந்து வகைகள் வைத்திய நிபுணரால் சிபாரிசு செய்யப்பட்ட சரியான மருந்து வகையாக இருக்கின்றதா என்பதும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

-www.tamilcnn.lk

TAGS: