மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திர சமூகத்தினர் கவலையடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மேற்குலக இராஜதந்திரிகள், சிறிலங்கா அரசாங்கத்திடம் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கூட்டு எதிரணியினருடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களை ஆரம்பித்ததை அடுத்தே, வெளிநாட்டு இராஜதந்திரிகள் கவலையடைந்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமைக்கப்பட்டால், அது ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு அமைக்கப்படும் பாதையாக இருக்கும் என்றும் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வர அனுமதிக்கப்பட்டால், சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலைமைகள் மீண்டும் பழையபடி இருண்ட நாட்களுக்குத் திரும்பும் என்றும் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், சிறிலங்காவுக்கான அமெரிக்க, பிரித்தானிய, இந்திய, சீன தூதுவர்கள் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-puthinappalakai.net