அரசு கூரியர் சேவையை பயன்படுத்தி கொகைன் கடத்த முயற்சி

ரஷ்ய தூதரகத்தில் அரசு கூரியர் சேவையை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு கொகைன் கடத்தும் சதித்திட்டத்தை முறியடித்திருப்பதாக அர்ஜெண்டினா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2016 டிசம்பர் மாதத்தில் ரஷ்ய தூதரகத்தின் இணைப்பு கட்டடத்தில் சுமார் 400 கிலோ கொகைன் பார்சல்கள் இருப்பதாக ரஷ்ய தூதர் தெரிவித்ததை அடுத்து அவை கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் ஒரு ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டு போதைப்பொருளுக்கு பதிலாக மாவை மாற்றி வைத்து, கண்காணிப்பு சாதனங்களையும் பொருத்தினார்கள்.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக அர்ஜெண்டினாவிலும், ரஷ்யாவிலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.

ப்யூனோஸ் ஏர்ரிஸ் தூதரகத்தில் இருந்து 50 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான கொகைன் கைப்பற்றப்பட்டதாகவும், அது மிகவும் தூய்மையானதாக இருந்ததாகவும் அர்ஜெண்டினா பாதுகாப்பு அமைச்சர் பேட்ரிசியா புல்ரிச் கூறுகிறார்.

ரஷ்யாவுக்கும், ஜெர்மனிக்கும் இந்த கொகைன் போதைப்பொருள் கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த கடத்தல் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர் ஜெர்மனியில் இருப்பதாக தெரிவித்த புல்ரிச், அவர் ஜெர்மனி காவல்துறையினரால் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்

அர்ஜெண்டினாவில் இருந்து இருவரும், ரஷ்யாவில் இருந்து மூவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த புலன் விசாரணையில் ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகள் உதவியதாக கூறும் அர்ஜெண்டினா பாதுகாப்பு அமைச்சர், அர்ஜெண்டினாவில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், ப்யூனோஸ் ஏர்ஸ் நகர காவல்துறை அதிகாரி என்று கூறினார். -BBC_Tamil