மன அழுத்தம்: ரோஹிஞ்சா குழந்தைகள் வரைந்த ஓவியத்தில் என்னவெல்லாம் இருந்தன?

ரோஹிஞ்சா குழந்தைகள் சிலர் ஒன்றாக இணைந்து மியான்மர் தேசிய கீதத்தை இசைக்கிறார்கள்.

மறுபுறம், ஒரு டஜன் பெண்கள் அருகே உள்ள அறையில் தையல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால், தினமும் அவர்களுக்கு ஊதியமாக 40 ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த வருவாயை கொண்டுதான் அவர்கள் ஜீவிக்க வேண்டும்.

இந்த இடம் வங்காளதேசத்தில் உள்ள உள்ள பலுகாலி அகதி முகாம். மியான்மரிலிருந்து வன்முறைக்கு பயந்து தங்கள் உயிரை காத்துக் கொள்ள இங்கே வந்தவர்கள் உள்ளார்கள்.

சொந்த நாட்டிலேயே அந்நியப்பட்டுப் போன இந்த குழந்தைகளில் பலர், தங்கள் கண் எதிரிலேயே தங்கள் உற்றார் உறவினர்கள் இறந்ததை பார்த்தனர். துயர்மிகு அந்த நாட்கள் கொடுத்த நினைவுகள் வலி மிகுந்தவை. என்றுமே மறக்க இயலாத ஆறாத காயத்தின் வலியை அவை கொடுக்கின்றன; கவலைக் கொள்ள வைக்கின்றன.

அந்த முகாமில் ஏராளமான சிறுவர்கள் இருக்கிறார்கள்.

அந்தச் சிறுவர்களில் ஒருவர் மட்டும் மிகவும் அமைதியாக ஜன்னல் ஒன்றின் அருகே நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் பெயர் மொஹம்மத் நூர். அவர் வயது 12. அந்த சிறுவனின் தந்தை நீண்ட காலமாக நோய்வாய்பட்டிருந்தார். கடந்த ஆண்டு அவர் காலமானார்.

மியான்மரில் நடந்த வன்முறைகளுக்குப் பிறகு மொஹம்மத் நூரின் வாழ்க்கை ஒரே நாளில் மாறியது.

மொஹம்மத் நூர் சொல்கிறார், “அப்போது நான் சந்தையில் காய்கறி விற்றுக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ முகமூடி அணிந்த சிலர் வந்தனர். அவர்கள் கத்தியால் மக்களை குத்த தொடங்கினர். என்னுடைய இரு உறவினர்கள் அந்த வன்முறையில் இறந்தனர். நான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். அடுத்த சில மணிநேரங்களில் நாங்கள் வங்க தேசத்திற்கு பயணமானோம். ஆனால், அந்த நினைவுகள் என்னை அச்சுறுத்துகின்றன. நான் எப்போதும் எனக்குள்ளே ஒரு வலியை உணர்கிறேன்.”

வங்கதேசம் நோக்கி

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மரில் மோசமான வன்முறை வெடித்தது. இதன் பின்னர், ஏறத்தாழ ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தங்கள் உயிரை காத்துக் கொள்ள, வன்முறையிலிருந்து தப்பிக்க வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.

வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்கின்றன சர்வதேச உதவி அமைப்புகள். இவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதாகவும் கூறுகின்றன அந்த அமைப்புகள்.

மனநல ஆலோசனை

மஹ்மூதா ஒரு மனநல மருத்துவர். இவர் கடந்த நான்கு மாதங்களாக வங்கதேசத்தில் காக்ஸ் பஜாரில் உள்ள ஒரு சந்தையில் பணிபுரிந்து வருகிறார்.

அவர் அகதி முகாம்களில் உள்ள ரோஹிஞ்சா குழந்தைகளின் நிலை மிக மோசமாக உள்ளது என்கிறார்.

அவர், “கடந்த காலங்களில் அந்த குழந்தைகள் பார்த்த விஷயங்கள், அவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை கொடுத்துள்ளன. சிலர் தங்கள் பெற்றோர் தங்கள் கண் முன்னால் கொலை செய்யப்படுவதை பார்த்து இருக்கிறார்கள். வீடுகள் கொளுத்தப்படுவதை சிலர் பார்த்து இருக்கிறார்கள். பலர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அவர்களுக்கு இதிலிருந்து மீள மனநல ஆலோசனை தேவைப்படுகிறது.” என்கிறார்.

குழந்தைகள் பொறுப்பில் குடும்பங்கள்

வங்கதேசத்தில் ஏராளமான அகதிகள் முகாம்கள் உள்ளன. அதில் உள்ள ஏறத்தாழ 5000 குடும்பங்களை நிர்வகிப்பது சிறுவர்கள்தான்.

சிறு வயதிலேயே அவர்களின் தோள்களில் கடுமையான சுமை வந்து சேர்ந்துவிட்டது. அந்த பருவத்திற்கே உரிய வண்ணமயமான ஓர் உலகில் இல்லாமல், அழுத்தம் தரும் சூழலில் வாழ்கிறார்கள்.

இந்த அகதி முகாம்களில் அவ்வபோது மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த மருத்துவர்களுடன் பேசுகையில், இந்த குழந்தைகளுக்கு காலரா, காய்ச்சல், ஊட்டசத்து குறைபாடு உள்ளதாக கூறுகிறார்கள்.

மீடியாகோ சா ஃபிரான்ஸியா என்னும் சர்வதேச உதவி அமைப்பை சேர்ந்த மருத்துவர் சிண்டி ஸ்காட் நம்முடன் பேச ஒப்புக் கொண்டார்.

மன அழுத்தம்

குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படுகிறது என்கிறார் சிண்டி ஸ்காட். அவர் நம்மிடம் சில ஓவியங்களை காண்பித்தார்.

“நாங்கள் குழந்தைகளிடம் அவர்களின் சுற்றுச்சூழல் குறித்து ஓவியம் வரைய சொன்னோம். அனைவரும் வரைந்தார்கள். ஆனால், 9 வயதுடைய ரோஹிஞ்சா சிறுவன், மலை, மரங்கள் மற்றும் நதி வரைந்தார். அதுமட்டுமல்ல, தாழப் பறக்கும் ஒரு ஹெலிகாப்டர் தங்கள் வீடுகளின் மீது குண்டுகள் போடுவது போலவும் வரைந்தார். இதுதான் அங்குள்ள குழந்தைகளின் நிலை. இந்த அளவுக்கு மன அழுத்தத்தில்தான் அவர்கள் இருக்கிறார்கள்” என்கிறார் ஸ்காட்.

குழந்தைகளுக்கு மற்ற அனைத்தையும்விட இப்போது உளவியல் சிகிச்சைதான் உடனடியாக தேவைப்படுகிறது என்கிறார்கள் உளவியல் சிகிச்சை வல்லுநர்கள். -BBC_Tamil