மியான்மரில் ரக்கைன் மாகாணத்தின் தலைநகரான சிட்வேயில், 3 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் ஒரு போலீஸ் அதிகாரி காயம் அடைந்ததாகவும், இச்சம்பவத்திற்கு பின்னால் இருப்பது யார் என்று இதுவரை தெரியவில்லை என்றும் போலீஸ் கூறியுள்ளது.
3 குண்டுகளில் ஒரு குண்டு, உள்ளூர் அதிகாரி ஒருவரின் வீட்டின் அருகே வெடித்தது. ஒன்று நீதிமன்றம் அருகிலும், மற்றொன்று பதிவு அலுவலகம் அருகிலும் வெடித்துள்ளது.
வீடுகள் தாக்கப்பட்டது உள்ளிட்ட வன்செயல்களால் ரக்கைன் மாகாணத்தில் இருந்து, பல லட்ச ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கடந்த ஆண்டு நாட்டை விட்டு அகதிகளாக வெளியேற நேரிட்டது.
போலீஸ் சாவடிகள் மீது ரோஹிஞ்சாக்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ரோஹிஞ்சாக்கள் இருந்த கிராமங்கள் எரிக்கப்பட்டு, பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.
பொதுமக்களை தாக்கியதான குற்றச்சாட்டை மறுத்த மியான்மர் ராணுவம், தீவிரவாதிகள்தான் தங்கள் இலக்கு என கூறியது.
இந்நிலையில், கையில் தயாரிக்கப்பட்ட 3 வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை செய்தி தொடர்பாளர் கர்னல் ம்யோ து சொ ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ரோஹிஞ்சாக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடைபெற்ற இடத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தெற்கில் சிட்வே நகரம் அமைந்துள்ளது.
2012-ம் ஆண்டு அங்கு நடைபெற்ற மத கலவரத்தை தொடர்ந்து சிட்வேயில் இருந்த பெரும்பாலான ரோஹிஞ்சாக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். -BBC_Tamil