சிரியா போர்: கிழக்கு கூட்டாவில் பொதுமக்கள் 500 பேர் பலி

சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 121 பேர் குழந்தைகள் என பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற கண்காணிப்பு குழுவான “சிரியன் அப்சர்வேட்டிரி ஃபார் ஹூமன் ரைட்ஸ்” அமைப்பு கூறியுள்ளது.

ரஷியாவால் ஆதரிக்கப்படும் சிரியா அரசு படைகள், இப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், போர்நிறுத்த தீர்மானத்துக்கு ஒப்புக்கொள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் போராடி வருகிறது.

கிழக்கு கூட்டாவின் நிலை என்ன?

சனிக்கிழமையன்று முக்கிய நகரமான டூமாவில் 17 பேர் உட்பட 29 பேர் கொல்லப்பட்டதாக சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இந்த வாரம் மட்டும் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கான நேரடி ஈடுபாட்டை ரஷியா மறுத்து வந்தாலும், சிரியா மற்றும் ரஷிய நாட்டு விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக இக்குழு கூறியுள்ளது.

மேலும், 3 லட்சத்து 93 ஆயிரம் பேர் சிக்கியுள்ள ஓரிடத்தில், பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன.

பொதுமக்களை தாக்கவில்லை என்று கூறி குற்றச்சாட்டுக்களை மறுத்து வரும் சிரியா அரசு, பயங்கரவாதிகளிடம் இருந்து கிழக்கு கூட்டாவை விடுவிக்க முயற்சிப்பதாக கூறுகிறது.

இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நிலை, உலகத் தலைவர்களை எச்சரித்துள்ளது. கிழக்கு கூட்டாவை “பூமியின் நரகம்” என ஐ.நா செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் விவரித்துள்ளார். -BBC_Tamil