சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஒப்புதல்..

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப்படையினர் இதுவரை இல்லாத அளவுக்கு ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஒர் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ந்து வருகின்றனர்.

இந்த சூழலை சாதகமாக கொண்டு விரைவில் போராளிகளை அழிக்கும் நோக்கில் அரசுத்தரப்பு கூட்டுப்படையினர் கிழக்கு கூத்தா பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக ஓயாது வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில், சிக்கி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.

பலியானவர்களில் பாதிபேர் 15 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவம் மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனாலும், போர் நிறுத்தம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஒருமனதாக ஆதரவு அளித்துள்ளது. இதனை அடுத்து போர் நி்றுத்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது, தற்காலிக முகாம்கள் அமைப்பது போன்ற பணிகள் இந்த 30 நாட்களில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த போர் நிறுத்தம் ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான சண்டைக்கு பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் மீதான விவாதத்தில், அரசு ஆதரவு படையில் உள்ள ரஷ்யா தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பேசினர்.

இந்த 30 நாட்கள் போர் நிறுத்தத்தை போராளி இயக்கங்கள் மற்றும் கிளர்ச்சிக்குழுக்கள் வரவேற்றுள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். இந்த ரசாயன தாக்குதலை நடத்தியது கிளர்ச்சியாளர்கள் என்றும் அரசுப்படைகள் என்றும் மாறி மாறி குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-athirvu.com