அதிகார போட்டி.. மதம்.. மரணம்.. சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?

டமாஸ்கஸ்: சிரியாவில் கடந்த 8 வருடங்களாக போர் நடந்து வருகிறது. 2012ல் தான் இந்த போர் உக்கிரமாக நடக்க ஆரம்பித்தது. தற்போது மீண்டும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

தொடரும் ஆட்சி

சிரியா நாட்டில் கடந்த 40 வருடமாக ஒரே குடும்பம்தான் ஆட்சி செய்து வருகிறது. 30 வருடம் ஹபீஸ் ஆட்சி செய்தார். கடந்த 10 வருடமாக அவரது மகன் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி நடக்கிறது. இவர்களை தாண்டி அந்த நாட்டில் எதிர்க்கட்சி, இயக்கங்கள் என எதுவுமே இல்லை.

ஆட்சி சரியில்லை

ஆனால் கடந்த 10 வருடங்களில் அந்த நாட்டின் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. யாருக்கும் வேலை இல்லை , அரசியல் சுதந்திரம் இல்லை, பொருளாதாரம் சரிவானது, பலருக்கு கல்வி இல்லை. இதனால் மக்கள் அரசுக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இதுதான் அரபு வசந்தமா?

அப்போதுதான் அரபு வசந்தம் தொடங்கியது. அரபு நாடுகளில் குடும்ப ஆட்சி நடத்தி வந்த பல நாடுகளில் புரட்சி நடந்தது. வரிசையாக பல நாடுகளில் ஆட்சி கவிழ்ந்தது. அதை பார்த்த சிரியா மக்கள் தங்கள் நாட்டிலும் இப்படி மாற்றம் நடக்க வேண்டும் என்று புரட்சியில் இறங்கினார்கள்.

ஷியா சன்னி பிரச்சனை

ஆனால் இது வெறும் புரட்சி என்ற அளவில் மட்டும் நிற்கவில்லை. இதற்கு பின் மத பிரிவினைகளும் இருக்கிறது. அந்த நாட்டில் சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லீம்கள் 90 சதவிகிதம் இருக்கிறார்கள். ஆனால் ஆட்சி ஷியா பிரிவை சேர்ந்த பஷர் அல் ஆசாத்திடம் இருக்கும். கடந்த 40 வருடமாக அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். ஆனால் இந்த பிரிவை உருவாக்கியதே வெளிநாட்டு அரசுகள்தான் என்று கூறப்படுகிறது.

ஆயுதம்

முதல்தடவை போராட்டம் சாதாரணமாக தொடங்கிய போதே சிரியா அரசு அவர்களை எளிதாக கட்டுப்படுத்தியது. இதனால் அங்கு இருக்கும் போராளி குழுக்கள் ஆயுதம் எந்த முடிவு செய்தார்கள். மற்ற நாட்டில் இருக்கும் போராளி குழுக்களிடம் ஆயுதம் வாங்கி போராட ஆரம்பித்தார்கள்.

ஏன் இவ்வளவு நாளாக நடக்கிறது

ஆரம்பத்தில் சிரியா ராணுவத்தை விட போராளி குழுக்கள் மிகவும் வலுவாகவே இருந்தது. இதனால் போர் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் முடிந்து இருக்கும். ஆனால் தற்போது அங்கு உலக நாடுகள் அனைத்தும் உள்ளே வந்து இருக்கிறது. இதனால் 8 வருடமாக போர் நடக்கிறது.

நாடுகள் உள்ளே வந்தது

இதில் ரஷ்யா, ஈராக், அமெரிக்கா ஆகிய நாடுகள் சிரியா அரசு படைகளுக்கு உதவுகிறது. அதேபோல் சவுதி, துருக்கி போன்ற நாடுகள் போராளி படைகளுக்கு உதவுகிறது. சிரியாவை யார் பின்பிருந்து ஆளுவது என்ற அதிகார போட்டியை 3 வருடத்தில் முடிய வேண்டிய போரை 8 வருடமாக மாற்றி இருக்கிறது.

தீவிரவாதிகள் உள்ளே வந்தனர்

அமெரிக்கா, ரஷ்யா வந்த பின் தீவிரவாதிகள் இல்லாமல் இருப்பார்களா?. ஆம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகள் உள்ளே வந்தது. அதன்பின் அல்கொய்தாவின் துணை அமைப்புகள் பல உள்ளே வந்தது. 8க்கும் மேற்பட்ட போராளி குழுக்கள் ஒன்றாக சேர்ந்தது. இவர்கள்தான் ரஷ்யாவின் வான்வெளி தாக்குதலை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

என்ன விளைவு

இவர்களின் இந்த போர் காரணமாக 2015 வரை 3 லட்சம் பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அதற்கு பின் கணக்கு எடுக்கப்படும் பணி நிறுத்தப்பட்டது. இப்போதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மரணம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த போர் நிறுத்தம் பற்றிய எந்த வித அறிவிப்பும் இதுநாள் வரை வெளியாகவில்லை.

tamil.oneindia.com