வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்க குழந்தைகள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க வேண்டும் என்று ஐ.நாவின் நிலைபேண் வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) திட்டத்தின்கீழ் வைத்திருக்கும் இலக்கை அடைய முடியாது என்பது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கல்வி தொடர்பாக ஆப்பிரிக்க நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
‘நேச்சர்’ சஞ்சிகையில் பதிப்பிடப்பட்டுள்ள இந்த இரு ஆய்வுகளிலும், 2000 முதல் 2015 வரை 51 ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தை வளர்ச்சி விகிதம் மற்றும் மகப்பேறு வயதுடைய பெண்கள் அடைந்திருக்கும் கல்வி ஆகியவை குறித்த தரவுகள் திரட்டப்பட்டன.
மேற்கண்ட இரு விடயங்கள் குறித்தும் ஒவ்வொரு தனிப்பட்ட கிராமத்தின் புள்ளிவிவரங்களையும் தெளிவாக விளக்கும் வரைபடங்களை வெளியிட்டுள்ள இந்த ஆய்வுகள் மூலம் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளிலும் குழந்தைகளின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும் குறைந்தது ஒரு பிராந்தியமாவது இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த இரு காரணிகளும் குழந்தை இறப்பு விகிதத்தை கணிப்பதில் முக்கியமானவை என்பதால் ஆய்வாளர்கள் அவற்றைத் தேர்ந்தெடுத்தனர்.
“மக்கள் நல்ல நிலையில் இருக்கும்போதும் எந்த விடயங்களில் அவர்களுக்கு போதிய முன்னேற்றம் இல்லை என்பதை அறிய இவை இரண்டும் உதவும்,” என்கிறார் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சுகாதார ஆய்வாளராக இருக்கும் பேராசிரியர் சைமன் ஹே.
கிராம அளவில் சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்த ஹே மற்றும் அவரது குழுவினர் ஐந்து சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு ஒரு வரைபடம் வீதம், குழந்தைகள் வளர்ச்சி மற்றும் மகப்பேறு வயதுடைய பெண்கள் அடைந்திருக்கும் கல்வி ஆகியவை குறித்த வரைபடங்களை உருவாக்கினர்.
இந்த ஆய்வுகள் மூலம் சகாரா பாலைவனத்துக்கு கீழுள்ள நாடுகள், கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகள் ஆகியன ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதில் முன்னேற்றம் கண்டுள்ளது தெரியவந்தது.
ஒரே நாட்டுக்குள் இருக்கும் பல்வேறு பகுதிகளுக்கு இடையிலும் அந்த முன்னேற்றத்தில் வேறுபாடுகள் இருப்பதும் தெரிய வந்தது.
இத்தகைய தரவுகளை அறிவதன் மூலம் தங்கள் வசம் உள்ள வளங்கள் செலுத்தும் நேரடித் தாக்கம் குறித்து கொள்கை வகுப்பாளர்கள் அறிய முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இது குறித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ள, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் முன்னாள் பொதுச் செயலருமான கோஃபி அன்னான், “தரவுகள் இல்லாவிட்டால் நாம் பறக்கும் பறவைகள் போலவே. உங்களால் பார்க்க முடியாவிட்டால், பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியாது,” என்கிறார்.
‘மோசமான இடைவெளிகள் ‘
போர் நெருக்கடி நிலவும் பகுதிகளில் மோசமான இடைவெளிகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், இந்த வரைபடங்கள் தெரிவிக்கும் தகவல்கள் கவலை தருபவையாக உள்ளன என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு வரை ஆப்பிரிக்காவின் முன்னேற்றம் இதுபோன்ற வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்படவில்லை என்று கூறும் பேராசிரியர் ஹே, தங்காளால் ஆன சிறந்த தரவுகளை பொது வெளியில் தருவதன்மூலம், மக்களுக்காக வளங்களை முறையாகப் பயன்படுத்தப்பட வழிவகுக்கும் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
நவீன நோய் தொற்றியலின் முன்னோடியாக கருதப்படும் ஒரு முயற்சியின்போது, லண்டனில் காலரா பரவலை மருத்துவர் ஜான் ஸ்னோ வரைபட வடிவ தரவுகளாக பதிவு செய்தார்.
பட்டினிக்கு எதிரான நீண்ட போரில் மேற்கண்ட வரைபடத்தைப் போலவே தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைபடங்களும் திறன் வாய்ந்தவையாக இருக்கும் என்று கூறியுள்ளார் கோஃபி அன்னான். -BBC_Tamil