ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்பினருடன் இருந்த ஜெர்மன் நாட்டவர் கைது

கந்தகார்,

ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் மிகுந்த மாகாணமான ஹேல்மண்ட் மாகாணத்தில், தலீபான் அமைப்பைச்சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்த மூன்று பேரோடு சேர்த்து ஜெர்மன் நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த ஒருவர் தலீபான் அமைப்பினரோடு கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், தலீபான் அமைப்பில் ஐரோப்பிய நாட்டவர்கள் சிலரும் அங்கம் வகிக்கின்றனர் என்பதற்கான அரிதான உதாரணமாக பார்க்கப்படுவதாக  உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீண்ட தாடி மற்றும் கருப்பு நிற டர்பன் அணிந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஒருவர் தன்னை ஜெர்மன் நாட்டவர் என்றும் ஜெர்மன் மொழியில் அவர் பேசியதாகவும் ஹேல்மண்ட் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் உமர் ஸ்வாக் தெரிவித்துள்ளார். ஹேல்மண்ட் மாகாணத்தின் கேரேஷ்க் மாவட்டத்தில் மேற்கூறிய ஜெர்மன் நாட்டவர் கைது  செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கான் சிறப்பு படை பிரிவு மற்றும் ஆப்கான் வான்படை இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது  மேற்கூறிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட ஜெர்மன் நாட்டவர் தனது பெயர், அப்துல் வட்வூட் என்று கூறியிருப்பதாகவும் மேற்கொண்டு விசாரணைக்கு  கந்தகாருக்கு ஜெர்மன் நாட்டவர் அழைத்து செல்லப்பட்டு இருப்பதாகவும் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலீபான்கள் அமைப்பில் மத்திய ஆசியா, பாகிஸ்தான் ஆகிய நாட்டைச்சேர்ந்தவர்கள் உறுப்பினராக உள்ள போதிலும், மேற்கு நாடுகளைச்சேர்ந்தவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பது மிகவும் அரிதாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக தலீபான்கள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட  ஜான் வால்கர் லிந்த் என்ற அமெரிக்க நாட்டவர் கடந்த 2002 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அமெரிக்க தலீபான் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.

-dailythanthi.com