சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு கூட்டாவில் நடத்தப்படும் தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் தப்பி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் கிழக்கில் அமைந்திருக்கும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக பல முனைகளிலும் சிரியா அரசு ராணுவம் அழுத்தங்களை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.
இந்தப் பகுதியின் 10 சதவீத இடங்களை அரசு கைப்பற்றியுள்ளது என்று ‘சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ்’ என்ற அமைப்பின் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இந்த இடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தஐநா தூதர் ஒருவரால் அங்கு செல்ல முடியவில்லை.
‘டௌமா’ என்கிற முக்கிய நகரத்திற்கு மனிதநேய உதவிகளை 40 டிரக்குகளில் கொண்டு செல்வதற்கான அனுமதியை சிரியாவின் அதிகாரிகளிடம் இருந்து பெறுவதில் தோல்வியடைந்திருப்பதாக ஐநா கூறியுள்ளது.
“தேவைப்படுகின்ற போர் நிறுத்தத்துக்கு மாறாக, அதிக மோதல்கள், அதிக இறப்புகள், பசி, பட்டினி மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டு தாக்குதல் என அதிகக் கவலை அளிக்கும் செய்திகள் வருகின்றன” என்று ஐநாவின் பிரதேச மனிதநேய ஒருங்கிணைப்பாளர் பனோஸ் மௌம்ட்சிஸ் தெரிவித்திருக்கிறார்.
குண்டுவீச்சுகளால் சின்னாபின்னமாகும் கிழக்கு கூட்டா
“பொது மக்களுக்கு கூட்டாக வழங்கப்படும் இந்த தண்டனையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.
முற்றுகையிடப்பட்டுள்ள இந்த இடத்தில் 3 லட்சத்து 93 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர்.
சிரியாவின் முக்கிய ஆதரவு நாடான ரஷ்யா தினசரி 5 மணிநேர போர் நிறுத்தத்துக்கு உத்தரவிட்டதோ, ஐநாவால் கோரப்பட்ட நாடு தழுவிய போர் நிறுத்தமோ, முற்றுகையிடப்பட்ட இந்த இடத்திற்கு மனித நேய உதவிகளை கொண்டு சேர்க்க உதவவில்லை. -BBC_Tamil