அடுத்த மாதம் நடக்கவுள்ள ஒரு உச்சி மாநாட்டின்போது வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் சந்திக்கவுள்ளதாக தென் கொரிய அரசின் தூதர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கு பிறகும், கிம் ஜோங்-உன் வட கொரிய தலைவராக பதவியேற்ற பின்னரும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பது இதுவே முதல்முறையாக இருக்கும்.
தங்கள் நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டால்தான் அணுசக்தி ஆயுதங்களை கைவிடுவது பற்றிய பேச்சுவார்த்தையை மேற்கொள்வோம் என்று தங்களிடம் கிம் கூறியதாக தென் கொரிய தூதர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முந்தைய பேச்சுவார்த்தைகளின்போது அணுசக்தி தொடர்பான தன்னுடைய செயற்பாட்டை நிறுத்திக்கொள்வோம் என்று உறுதியளித்ததை வட கொரியா காப்பாற்றியதில்லை.
வட கொரிய தலைவர் ஜிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய தலைவரான மூன் ஜே-இன் ஆகியோர் இருநாடுகளுக்கிடையேயான சர்ச்சைக்குரிய எல்லை கிராமமான பன்முஞ்சோமில் சந்திக்க உள்ளனர். மேலும், இருநாடுகளுக்கிடையே ஹாட் லைனை தொடங்குவதற்கும் இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இருநாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை நடக்கும்போது எவ்விதமான ஏவுகணை பரிசோதனையும் மேற்கொள்ளப்படாது என்று வட கொரிய தலைவர் உறுதியளித்ததாக செய்தியாளர்களிடம் பேசிய தென் கொரிய பிரதிநிதிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘இரவு விருந்து’
முன்னதாக திங்கட்கிழமையன்று தென் கொரிய பிரதிநிதிகளுக்கு இரவு உணவு விருந்து அளித்தார் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்.
2011ஆம் ஆண்டு அவர் பதவியேற்ற பிறகு தென் கொரிய பிரதிநிதிகள் அவரை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
தென் கொரியாவின் பியாங்சேங்கில் கடந்த மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு இரு நாடுகளுக்குமான உறவில் சற்று இணக்கம் காணப்படுகிறது.
பத்து பேர் கொண்ட அந்த பிரதிநிதிகள் குழுவில் தென் கொரியாவின் புலனாய்வுத் துறை தலைவரான சூ ஹூன் மற்றும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சுங் உய்-யோங் ஆகியோரும் அடங்குவர்.
கிம் ஜாங் உன் தென் கொரிய பிரதிநிதிகளை “அன்பாக வரவேற்று” அவர்களிடம் “மனம் திறந்து பேசியதாக” வட கொரியாவின் செய்தி முகமை தெரிவித்தது. -BBC_Tamil