வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங்-நாம் வடகொரியா அரசின் உத்தரவின்பேரில் நிகழ்த்தப்பட்ட ஒரு நச்சு வேதிப்பொருள் தாக்குதலிலேயே கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
வடகொரிய தலைநகர் பியாங்கியாங்கில், அந்நாட்டு அதிபரை தென்கொரிய அதிகாரிகள் குழு திங்களன்று சந்தித்துப் பேசிய பின், அச்சந்திப்பு உளப்பூர்வமாக இருந்ததாக தென்கொரியா தெரிவித்த மறுநாளே இந்த விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விமான நிலையத்தில், 2017ஆம் ஆண்டு இரு பெண்கள் வி.எக்ஸ் நர்வ் ஏஜென்ட் (VX nerve agent) எனும் நச்சு வேதிப்பொருளை கிம் ஜோங்-நாமின் முகத்தில் பூசிய நிலையில், மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் அவர் இறந்தார்.
தற்போது மரண தண்டனை குற்றச்சாட்டில் விசாரணையை எதிர்கொண்டுள்ள அந்த இரு பெண்களும் தாங்கள் ஒரு தொலைக்காட்சியின் கேளிக்கை நிகழ்ச்சிக்காக அவர் மீது அந்த வேதிப்பொருளைப் பூசுவதாக நினைத்ததாகவும் அது நச்சு என்று தங்களுக்குத் தெரியாது என்றும் கூறியிருந்தனர்.
“ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச விதிகளை மிகவும் வெளிப்படையாக மீறும் வடகொரியாவின் செயல், அந்நாட்டு அரசின் எதற்கும் கவலைப்படாத இயல்பைக் காட்டுகிறது,” என்று கூறியுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளர் ஹெதர் நார்ட், “வடகொரியா செயல்படுத்தி வரும் பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ளமுடியாது,” என்றும் தெரிவித்துள்ளார்.
கிம் ஜாங்-நாம் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் வடகொரியா இருந்ததாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. வடகொரியா மீது அமெரிக்கா மேற்கொண்டு விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகள் மார்ச் 5 அன்று அமலுக்கு வந்தன.
தென்கொரியாவின் பியாங்சாங்கில் நடந்து முடிந்துள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றபின் உண்டான இணக்கத்தைத் தொடர்ந்து, கிம் ஜோங்-உன் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோர் அடுத்த மாதம் சந்தித்துப் பேசவுள்ளனர்.
கடந்த 2011இல் உன் பதவியேற்றபின் தென்கொரிய அதிபர் ஒருவரை அவர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
தனது குடும்பத்தினருடன் தொடர்பில்லாமல் இருந்த கிம் ஜோங்-நாம் வயதில் மூத்தவராக இருந்தாலும், அவரைவிட இளையவரான கிம் ஜோங்-உன் அதிபராக்கப்பட்டார். இறப்பதற்கு முன், அவர் தன் வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை மகுவா, சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கழித்தார்.
வடகொரியா மீது தனது குடும்பத்தினர் அதிகாரம் செலுத்தி வருவதை கடந்த காலங்களில் விமர்சித்துள்ள அவர், தனது ஒன்று விட்ட சகோதரர் உன், தலைமைப் பண்புகள் இல்லாதவர் என்று கூறியதாக 2012இல் வெளியான நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. -BBC_Tamil