அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை நேரில் சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் விடுத்த அழைப்பை டிரம்ப் ஏற்றுக்கொண்டார். இரு தரப்பினரிடையே பல மாதங்களாக தொடர்ந்த அவமரியாதை, அச்சுறுத்தல்கள் மற்றும் பரஸ்பர விரோதப் போக்குகளுக்கு பின்னர் தற்போது திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் மே மாத தொடக்கத்தில் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சந்திப்பு எங்கே, பேச்சுவார்த்தையின் மையப் பொருள் என்ன என்பது போன்ற விஷயங்களை முடிவு செய்ய குறுகிய கால அவகாசமே எஞ்சியிருக்கிறது. அதனால் அடுத்து என்ன நடக்கும் என்று பல கேள்விகள் எழுவதில் ஆச்சரியம் இல்லை.
எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சந்திப்பு இது?
பேச்சுவார்த்தைகள் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்கமுடியாது என்றாலும், அமெரிக்கா மற்றும் வட கொரியா தலைவர்கள் முதன்முறையாக சந்திப்பது முக்கியத்துவம் மிக்கது என்பதை மட்டும் உறுதியாக கூறமுடியும். இதற்கு முன்பு பல முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பலர் வட கொரிய தலைவர்களை சந்தித்திருந்தாலும், அதிபராக பதவிவகித்த காலத்தில் யாரும் அவர்களை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“சீனத் தலைவரான மாவோவை அதிபர் நிக்சன் சந்தித்ததைவிட, தற்போது நடைபெறும் டிரம்ப்-கிம் சந்திப்பை குறைவாக மதிப்பிடமுடியாது” என்று ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் SAIS இல் அமெரிக்க-கொரியா நிறுவனத்தின் ஆய்வாளர் மைக்கேல் மேடன் பிபிசி நிருபரிடம் கூறினார்.
சந்திப்பு பற்றி நமக்கு என்ன தெரியும்?
ஒன்றுமே தெரியாது என்பதே உண்மை. டிரம்ப், கிம்மை “மே மாதத்தில்” சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியிருந்தாலும், சந்திக்கும் நாள், நேரம், இடம் என எந்த தகவலும் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
இரு நாட்டு எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியான பன்முன்ஜோமில் என்ற ‘சமாதான கிராமத்தில்’ இந்த சந்திப்பு நடக்க “ஊகமான வாய்ப்பு” என்று மேடன் கருதுகிறார்.
இருப்பினும், கொரியா பணிக் குழுவின் டாக்டர் ஜான் பார்க் கூறுகையில், இருவருக்குமான சந்திப்பு “நடுநிலையான இடத்தில்” நடக்கக்கூடும் என நம்புகிறார். அந்த இடம் சீனா அல்லது வேறு இடமாக இருக்கலாம்.
அணுசக்தி திட்டம் தொடர்பாக 2012க்கு பிறகு நேரடியாக பேசுவது இதுவே முதல்முறையாகும். தென் கொரிய தலைவர் மூன் ஜே-இன்னை ஏப்ரல் மாதத்தில் பன்முன்ஜோமில் சந்திக்க வட கொரிய அதிபர் திட்டமிடப்பட்டுள்ள போதிலும், இதுவரை கிம் ஜோங்-உன் எந்தவொரு வெளிநாட்டுத் தலைவரையும் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விவாதப்பொருள் என்ன?
அணுஆயுதங்களை குறைக்கவேண்டும் என்பது விவாதத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி இடம்பெறும் என்பதும் அதற்கான தீர்வுகளை தேடும் ஒரு களமாக இந்த அரிய சந்திப்பு அமையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
ஆனால் “அணுஆயுதத்தை குறைப்பதற்கு” உறுதிபூண்டிருப்பதாக கிம் ஜோங்-உன் கூறியிருந்தாலும், வட கொரியா இதுவரை அதன் அணு ஆயுதத்தை கைவிடுவதாக வாக்குறுதி எதுவும் கொடுக்கவில்லை.
“வடகொரியா அணுஆயுதத்தை முழுமையாக கைவிடவேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதோடு, தென்கொரியாவின் முக்கிய குறிக்கோளும் அதுவே என்று அந்நாடு கூறியிருக்கிறது” என்று RAND கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஆய்வாளர் புரூஸ் பென்னட் கூறுகிறார்.
“ஆனால் கிம் அணு ஆயுதங்களை கைவிட முடியாது என்பதை திரும்பத்திரும்ப வலியுறுத்தி சொன்னதை நினைவில் கொள்ளவேண்டியது முக்கியம்.”
பேச்சுவார்த்தையில் இடம் பெறக்கூடிய பிற முக்கியமான விடயங்கள்: பியோங்யாங்கில் சிக்கியிருக்கும் அமெரிக்கர்களைத் நாட்டுக்கு திரும்ப அனுப்ப கோரிக்கை வைக்கலாம்.
வடகொரியா அணுஆயுதத் திறன் கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டு, சாத்தியமான சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட வேண்டும் என்று வடகொரியா எதிர்பார்க்கிறது.
“சமாதான உடன்படிக்கை என்பது வட கொரியாவுக்கு மறு உறுதியளிக்கும் மற்றும் அவர்களது அணுசக்தி திட்டத்தின் பின்னால் உள்ள முக்கிய அறிவாற்றல்களில் ஒன்றை அகற்றுவது [தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்]” என்று மேடன் கூறினார்.
ஆனால் சமாதான உடன்படிக்கையின் ஒரு நிபந்தனையாக தென் கொரியாவிலிருந்து அமெரிக்கத் துருப்புக்களை திரும்பப்பெறவேண்டும் என்று வட கொரியா வலியுறுத்தக்கூடும். இது பேச்சுவார்த்தைகளில் சிக்கல்களை அதிகரிக்கக்கூடும்.
“சமாதான உடன்படிக்கை கையெழுத்தானால் பத்து ஆண்டுகளுக்கு பிறகு தென் கொரியாவில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறும் என்று கிம் எதிர்பார்க்கிறார்” என்று பென்னட் கூறினார்.
“அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறிய பிறகு, தென் கொரியாவை பலவந்தமாக மீண்டும் வட கொரியாவுடன் ஒன்றிணைக்க விரும்பும் அவருடைய குறிக்கோளை அடைவதற்கான பாதுகாப்பான வழியாக இருக்கும்”.
விதிக்கப்பட்ட தடைகள் என்னவாகும்?
வடகொரியா மீதான தடைகள் எந்த அளவிற்கு அகற்றப்படும் அல்லது தளர்த்தப்படும் என்பதை கணிப்பது கடினம் என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இது பேச்சுவார்த்தைகளின் வெற்றியை சார்ந்திருக்கிறது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.”வட கொரியா நிச்சயமாக தடைகளில் இருந்து நிவாரணம் தேவை என்ற கோரிக்கையை முன்வைக்கும், அது அவர்களின் முக்கிய தேவை” என்று பென்னட் கூறுகிறார்.
“இங்கு எழும் கேள்வி என்பது, கூடுதல் அதிகரிப்பிற்கு பொருளாதாரத் தடைகளை அதிகரிப்போமா அல்லது மொத்தமாக அணுஆயுதங்களை தடை செய்தபிறகுதான் தடைகளை அகற்றுவோம் என்று வலியுறுத்துவோமா?” என்று கேட்கிறார்.
வட கொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று பென்னெட் நம்புகிறார்.
“வட கொரியா இந்த அக்டோபரில் கடுமையான கரன்சி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்று தகவல்கள் வந்துள்ளன, அதனால் உண்மையில் வட கொரியா சில கடுமையான பிரச்சனைகளில் இருப்பதாக நான் நினைக்கின்றேன்.”
வெற்றிகரமான சந்திப்பு எப்படி இருக்க வேண்டும்?
ஒரு வெற்றிகரமான சந்திப்பு என்பது அனைத்து தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு கையொப்பமிடப்பட்ட “உடன்பாடு” என்று சொல்லலாம் என்கிறார் மேடன்.
“வட கொரியா அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளை முடக்குவது, வெளிநாட்டு சர்வதேச அணு ஆய்வாளர்கள் தங்கள் நாட்டின் அணு உலைகளை பார்வையிட அனுமதிப்பது போன்ற உறுதியான முடிவுகளுக்கு இரு தலைவர்களின் சந்திப்பு வித்திட்டால், பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இருந்தது” என்று கருதலாம் என்கிறார் மடோன்.
ஆனால் இரு தரப்பினருமே, சமரசத்தை எட்ட “விஷயங்களை பெறுவதோடு, கொடுக்கப்படவும் வேண்டும்” என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும் என்று பென்னட் வாதிடுகிறார்.
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?
“டிரம்பின் போக்கு செவிசாய்ப்பதாக இல்லை, அமெரிக்கா கடினமான நாடு என்று கூறி வட கொரியா பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறலாம் என்பதும் பேச்சுவார்த்தைகளின் மோசமான சூழ்நிலையாக இருக்கலாம்” என்று பென்னட் கூறினார்.
ஆனால் அமெரிக்கவும், வட கொரியாவும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்குமாறு வெறுமெனே இருந்தால் அது மிகவும் மோசமான, நம்பத்தகாத காட்சியாக இருக்கும்.
“சாலையில் கிடக்கும் காலி பாட்டிலை வெறுமனே உதைப்பது என்று நான் இதைச் சொல்வேன். அடுத்த அமெரிக்க அதிபராக மற்றொருவர் வரும்வரை பேச்சுவார்த்தைகளை ஒத்திப்போடுவது என்பதாகவும் அது இருக்கலாம்” என்கிறார் பென்னெட்.
“2030ஆம் ஆண்டுக்குள் வட கொரியாவிடம் 200 அணு ஆயுதங்கள் இருக்கலாம். அந்த நிலையில் தென்கொரியா சரணடைய வேண்டும் என்று வட கொரியா நிர்பந்தித்தால் என்னவாகும்? மீண்டும் நாம் காலி பாட்டிலை உதைப்பது போல், பேச்சுவார்த்தைகளை தள்ளிப்போட்டால், சில ஆண்டுகள் வரை அந்த பிரச்சனை மாறாமல் அப்படியே இருக்கும்.” -BBC_Tamil