வடக்கு மற்றும் தென் சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 50 ஆயிரம் பேர் அங்கிருந்து தப்பி வெளியேறி உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி படைகளும் அதன் கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து, தென் சிரியாவில் உள்ள ஆஃபிரின் நகரத்தில் இருந்து சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேறினர்.
துருக்கி நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் மற்றும் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
டமாஸ்கசுக்கு வெளியே உள்ள கிழக்கு கூட்டா பகுதிகளில், சிரிய அரச படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்.
கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்து வரும் இந்த போரில் இதுவரை 12 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
குறைந்தது 6.1 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், 5.6 மில்லியன் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிபர் பஷர் அல்- அசாத்துக்கு எதிரான எழுச்சி போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை சிரியாவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று நம்பப்படுகிறது. -BBC_Tamil