பிரிட்டனில் வாழ்ந்து வந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரியும், அவரது மகளும் நரப்பு மண்டலத்தை பாதிக்கும் நஞ்சால் தாக்குதலுக்குள்ளானதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் பிரிட்டனின் 23 ராஜீய அதிகாரிகளை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றவுள்ளது.
மாஸ்கோவிலுள்ள பிரிட்டன் தூதரகத்தின் ஊழியர்கள் ஒரு வாரத்திற்குள் தாயகத்திற்கு அனுப்பப்படுவர் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இரு நாடுகளுக்கு இடையில் கலாச்சார உறவுகளை வளர்க்கும் ரஷ்யாவிலுள்ள பிரிட்டன் கவுன்சிலை மூடிவிட போவதாகவும் இந்த அமைச்சகம் கூறியுள்ளது.
செர்கே ஸ்கிரிபால் மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நஞ்சு இருந்ததை, பிரிட்டன் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
23 ரஷ்ய ராஜீய அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றுகின்ற பிரிட்டனின் முடிவுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை வருகிறது.
மார்ச் 4ம் தேதி நடைபெற்ற சம்பவத்திற்கு ரஷ்யா மீது பிரிட்டன் குற்றஞ்சாட்டுகின்ற நிலையில், அதனை ரஷ்யா மறுத்துள்ளது.
ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார். -BBC_Tamil