தேசிய முன்னணி ஆட்சியில் இந்திய சமுதாயம் வெகுவாக புறக்கணிக்கப்பட்டதை மாறிவிட்ட இன்றைய அரசியல் சூழலில் துன் டாக்டர் மகாதீரும் மஇகா தலைவர்களும் தங்களையும் அறியாமல் ஏற்றுக் கொண்டுள்ளனர்; இதன் தொடர்பில் ஒப்புதல் வாக்கு மூலமும் அளித்து வருகின்றனர்.
இதற்கு வெகு அண்மைய சான்று, மலேசியவாழ் இந்திய சமுதாயத்திற்கு நான் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்ல முடியாது; முடிந்ததை செய்துள்ளேன்; அதையும் மடை மாற்றிக் கொண்டது மஇகா-வின் அன்றைய தலைமைதான் என்று கடந்த 14-ஆம் நாள் தலைநகரின் மையப் பகுதியில் பகிரங்கமாக சொல்லி இருக்கிறார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலான மகாதீர் ஆட்சியில், பொதுவாக வாழ்க்கைச் சூழலும் வர்த்தகமும் சுமூகமாக இருந்தது உண்மைதான் எனினும், எல்லா வகையாலும் பின் தங்கியிருந்த இந்திய சமுதாயமும் ஏனைய இனங்களைப் போல பொருளாதார-கல்வி-சமூக மறுமலர்ச்சியை எட்ட வேண்டும் என்பதைப் பற்றியோ அரசாங்க வேலை வாய்ப்பில் இந்திய சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது குறித்தோ அவர் பெரிதாக அக்கறைப் படவில்லை.
குறிப்பாக காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களில் ஏராளமானோர் மர்மமான முறையில் மரணமடைந்த பொழுதெல்லாம் சமுதாயத்தில் பிரதிபலித்த கொந்தளிப்பு பற்றி மகாதீரோ சாமிவேலோ பொருட்படுத்தியதில்லை; அதைப்போல வீட்டு வசதி, தொழில் வாய்ப்பு, இடம் பெயர்ந்த தோட்டப் பாட்டளிகளுக்கான நிவாரணம் குறித்தும் அக்கறை கொண்டதில்லை.
மொத்தத்தில் மகாதீரைவிட, சாமிவேலுதான் செம்மாந்த நிலையிலும் இறுமாப்பிலும் இருந்தார்.
ஆனாலும், 2008 பொதுத் தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன் துன் சாமிவேலுவை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தார் துன் மகாதீர். அப்படிப்பட்ட மகாதீரால் இப்பொழுது, அவரின் பெயரை வெளிப்படையாக சொல்லமுடியவில்லை; மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்.
அரசாங்கத்தின் சார்பில் ஏதோ போனால் போகிறது என்னும் மனப்பான்மையில் இந்திய சமுதாயத்திற்காக செய்த சிலவற்றையும் சாமிவேலு முறையாக நிறைவேற்றிக் கொடுக்கவில்லை என்றால், அதைப்பற்றி நீங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று அன்றைய அரசியல் கலந்துரையாடலில் கேட்கப்பட்ட கேள்விக்கு துன் மகாதீரால் பளிச்சென பதில் சொல்ல முடியவில்லை.
மாறாக, மஇகா உட்பிரச்சினையில் நான் எப்படி தலையிடுவது என்று எதிர்க் கேள்வி கேட்டு சமாளித்திருக்கிறார்.
எது உள் கட்சி பிரச்சினை? தேசிய முன்னணியையும் அம்னோவையும் நெடுங்காலமாக வழிநடத்திய அவருக்கு ஒரு கட்சியின் உள் பிரச்சினை எது?; வெளிப் பிரச்சினை எது என்பதெல்லாம் நன்கு தெரியும். தேசிய முன்னணியின் மூன்றாவது பெரிய கட்சி, விடுதலை அடைந்தது முதல் நாட்டின் மூன்றாவது இனத்தை அரசாங்கத்தில் பிரதிநிதிக்கும் கட்சி, அப்படிப்பட்ட கட்சி சமுதாய-கல்வி-பொருளாதார மேம்பாட்டிற்காக அரசாங்கத்திடம் இருந்து பெறும் நிதியையும் மற்ற அணுகூலத்தையும் வகையாக நிறைவேற்ற வில்லையென்றால் அதனால் மத்தியக் கூட்டரசின்பால் இந்திய சமுதாயத்தில் அதிருப்தி அலை எழலாம் என்பதை சுட்டிக் காட்டவும் அதைப்பற்றி தட்டிக் கேட்கவும் உரிமையும் தகுதியும் கொண்டிருந்த மகாதீர், அன்றைய ம.இ.கா. தலைவரிடம் எதையும் தட்டிக் கேட்கவில்லை.
அப்பொழுதெல்லாம் வாளாயிருந்துவிட்டு, மலேசிய அரசியல் களம் அடியோடு மாறிவிட்ட இன்றைய சுழலில், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால் இந்திய சமுதாயத்திற்கு நிறைய செய்வேன் என்றும் முன்பு தான் செய்ததை யெல்லாம் ம.இ.கா.தான் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை என்பதும் பச்சையான சந்தர்ப்பவாதம்.
அதைப்போல, மகாதீர், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இந்திய சமுதாயத்திற்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று இப்போது ம.இ.கா.வினர் அறிக்கை மேல் விடுவதும் அப்பட்டமான துரோகம் ஆகும். அப்போது நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? புளியங்காயும் மாங்காயுமா பறித்துக் கொண்டிருந்தீர்கள்.
அந்தக் காலக்கட்டத்தில் மகாதீருடன் கொஞ்சி குலாவிக் கொண்டு, ம.இ.கா.வின் ஆண்டுக் கூட்டத்திற்கு ஆண்டுதோறும் அவர அழைத்து வெண்சாமரம் வீசிவிட்டு இப்போது புறம்பேசுவது ம.இ.கா.வின் இயலாமையையும் அக்கறை இன்மையையும் தோலுரித்துக் காட்டுகிறது.
வெற்று அறிக்கைகளால் எல்லாக் காலத்திலும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை மகாதீர், ம.இ.கா, அம்னோ உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டாயத் தருணம் இது!
கண் கெட்ட பின் எதற்கு சூரிய நமஸ்காரம் ! இந்திய சமுதாயம் தலை எடுக்க முடியாமல் ! பொருளாதார மேம்பாட்டிலும் ! கல்வி வளர்ச்சியிலும் ! அரசாங்க உத்தியோகங்களிலும் ! புறக்கணிக்க பட்டதே! இவர்கள் காலத்தில் தான் ! இன்று கண் துடைப்பு எதற்கு ! அந்த ஆண்டவன் கிருபையால் இந்த மகா தீரர் அவராகவே பதவி விலகினார் ! இன்றும் இருந்திருந்தால் ! இந்திய சமுதாயத்தை ஏதும் இல்லாத சமுதாயமாக ஆக்கி இந்த நாட்டை விட்டே நம்மையெல்லாம் துரத்தி இருப்பார் ! நாற்றமடித்த குப்பையை கிளறுவதை விட்டு விட்டு இந்த சமுதாயம் முன்னேறும் வழிகளை காண்போம் ! அன்று அவரின் அடி வருடிகள் ! வாய்ப்பை பயன் படுத்தி தங்களை உயர்த்தி கொண்டார்கள் ! இன்று நாம் எது பேசினாலும் எழுதினாலும் ! குருடனும் ! செவிடனும் யானையை பார்த்த கதைதான் ! ஏய்த்து பிழைக்கும் வர்க்கத்தினருக்காக ! ஏமாளியாக வாழ பிறந்தவன் தமிழன் !
நீங்கள் மிகவும் கவனமாகக் காயை நகர்த்தினால் மட்டுமே நாம் இந்திய சமுதாயம் இந்த நாட்டில் இருக்கும் வரையில் இந்த இரு தலைவர்களையும் ஒரு நாளும் மறக்க முடியாது. அரசியல் எனும் போர்வையில் இந்திய சமுதாயத்தை வெகுவாக வெறுப்படைய செய்தவர்கள். இன்று நல்லவர்கள் போல் பேசும் இவர்கள் கடந்த காலத்தை மறந்துவிட்டு பொய்யான அறிக்கைகள் வழி நம்மை நம்ப வைத்தவர்கள்.
அன்று ஹிண்ட்ராப் என்ற ஒரு விழிப்புணர்ச்சி நம்மை வந்து அடைய வில்லை என்றால் இன்று வரையில் நாம் ஒரு விழிப்புணர்ச்சி கண்டு இருக்க முடியாது. நம்மில் ஓர் துரோகி யார் அவர் என தெரியும்…. அது கேள்விகள் இருந்தன. அது வேண்டாம் என்றும் விடுகிறேன். அந்த தாய் கட்சி தலைவர் காலத்தில் சுகம் கண்டவர்கள் இன்று சுகமாக வாழ்கிறார்கள். இந்தியர்க்களுக்கு என்று அந்த தாய் கட்சி தலைவர் அப்படி இப்படி என்று ஏதும் செய்து இருந்தாலும் மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் ஹிண்ட்ராப் சார்பாக வந்த திரு. உதயகுமார் அவர்கள் நமக்காக பல போராடங்கள் செய்தார்… இருப்பினும்கூட மக்கள் இந்தியர்கள் அவரின் மீது இருந்த ஆகாத நம்பிக்கை இப்போது கொஞ்சம் மறைந்து விட்டது.
இன்றும்கூட நமக்கு ஒரு தாய் கட்சியில் இருக்கும் ஒரு தலைவர் போன்று நமக்கு ஒரு தலைவர் கிடையாது. அவ்வப்போது முலைக்கும் திரு. வேதமூர்த்தி அவர்கள் திடமாகவும் இருபதாக தெரியவில்லை. அவரின் பேச்சுக்கள் நம்மை அவரின் பால் அரவணைத்தாலும் நம்மில் இருக்கும் தமிழ் பத்திரிகைகள் அதிக அளவு விளம்பரம் கொடுபதில்லை அவருக்கு.
இன்று வரையில் நமக்கு இந்தியர்களுக்கு யார் தலைவர் என்றால் அது ஒரு பெரிய கேள்விகள்….. புதியதாக வந்து இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் திரு. மகாதீர் அவர்கள் பல கதைகள் புதுமையாக சொல்லிவருகிறார்…. அவைகள் தேர்தல் சமயத்தில் அவர் சொல்லும் கதைகள்…. இவைகள் நாம் ஏற்கனவே கேட்டது….அவருடன் சேர்ந்து அந்த தாய் கட்சி தலைவரும் சொன்னது…காரணம், நமது வாக்குகள் அவருக்கு தேவை என்பதால்.
இன்று அந்த முன்னால் பிரதமர் இன்று எதிர்க்கட்சி தலைவர் திரு. வேதமூர்த்தியை அரவணைக்கிறார் என்றே தோன்றுகிறது. காரணம் ஓட்டுக்காக. இன்று கட்சிகள் சார்பாக நன்கு கொளுத்து போய் இருக்கும் தலைவர்கள் வரும் தேர்தலில் மறுபடியும் நின்று வெற்றி பெற இப்போதே ஆர்வம் காட்டுகிறார்கள்.
திரு. வேதமூர்த்தி அவர்களே எதாவது பார்க்க முடியும். இந்த முன்னால் பிரதமர், முன்னால் தாய் கட்சி தலைவர்கள்… இரு கோமாளிகள் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதியை போன்று இருக்காமல் கவனமாகக் இருந்தால் நல்லது. இதுதான் நமக்கு கடைசி வாய்ப்பும் கூடாக இருக்கலாம். நன்றி