டாப்சி நகர பள்ளியில் இருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நைஜீரிய பள்ளி மாணவியர் பலர் திரும்பி வந்துள்ளதாக பிபிசியிடம் பேசிய உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
கடந்தப்பட்ட 110 பள்ளி மாணவியரில் 76 மாணவிகள் காலையில் வாகன அணியொன்றால் அழைத்து வரப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
அவர்கள் அழைத்து வந்த சூழ்நிலைகள் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால், அதில் 5 மாணவியர் இறந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
ஒரு மாதத்திற்கு முன்பாகவே அவர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.
‘போகோ ஹராம்’ என்று நம்பப்படுகின்ற தீவிரவாதிகள் வாகன அணியாக நகரத்திற்குள் நுழைந்து இந்த மாணவியரை சமூகத்திடம் கையளித்தனர் என்று பெற்றோரில் ஒருவரான குன்டிலி புகார் என்பவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த தீவிரவாதிகள் உடனடியாக அவ்விடத்தைவிட்டு சென்றுவிட்டனர்.
விடுவிக்கப்பட்ட மாணவியர் மெலிந்தும், களைப்பாகவும் காணப்பட்டனர். இருப்பினும், தாங்கள் விடுதலை செய்யப்பட்டவுடன் தங்களின் முழு பலத்தையும் ஒன்றுதிரட்டி தங்களின் வீட்டுக்கு செல்ல ஓட தொடங்கினர் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடத்தப்பட்ட மாணவியரில் ஒருவராக இருந்த தன்னுடைய மகள் அய்ஷாவுடன் தொலைபேசியில் பேசுவதற்கு முடிந்தது என்று தந்தையருள் ஒருவரான மனுகா லாவால் கூறியுள்ளார்.
இந்தப் பள்ளி மாணவியர் திரும்பி வந்தார்களா, இல்லையா என்பதை உறுதி செய்யாத யோபி மாநில காவல்துறை தலைவர் அப்துல்மாலிக்கி சுன்மோன்னு, இது பற்றிய சில அறிக்கைகளை கேள்விப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
“போகோ ஹராம் இந்த மாணவியரை கொண்டு வந்துள்ளதாக” இந்த நகருக்கு அருகிலுள்ள சோதனை சாவடியில் வேலைசெய்யும் ராணுவ அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
டாப்சி நகரை தாக்கிய தீவிரவாதிகள் குழுவினரால் பிப்ரவரி 19ம் தேதி மாலை அவர்களின் பள்ளியில் இருந்து இந்த மாணவியர் கடத்தி செல்லப்பட்டனர்.
எல்லா மாணவியரும் தப்பி சென்றுவிட்டனர். யாரும் கடத்தப்படவில்லை என்ற தொடக்கத்தில் கூறப்பட்டது.
ஒரு வாரத்திற்கு பின்னர், இந்த மாணவியர் இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
இந்த பள்ளி மாணவியர் கடத்தல் ஏப்ரல் 2014ம் ஆண்டு அருகில் அமைந்திருக்கும் போர்னோ மாநிலத்தில் இருக்கும் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட சிபோக் மாணவியரின் கடத்தலோடு ஒப்பிடப்பட்டது.
அதில் சில மாணவியர் இன்னும் தீவரவாதிகளின் பிடியில்தான் உள்ளனர். -BBC_Tamil