பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தப்பட்ட ரோஹிஞ்சா அகதி சிறுமிகள் – பிபிசி புலனாய்வு

வங்கதேசத்தில் ரோஹிஞ்சா அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் பதின்ம வயது சிறுமிகளும் பெண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக பிபிசி ஆய்வு கண்டறிந்துள்ளது.

மியான்மரில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களில் இருந்து தப்பித்து, தங்கள் குடும்பத்தினருடன் வங்கதேசத்தை சரணடைந்த பரிதாபத்திற்குரிய இந்த சிறுமிகள் அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். இந்த முகாம்களில் தங்கியிருக்கும் பெண்களை வெளிநாட்டினருக்கு பாலியல் தொழிலுக்காக அனுப்பப்படுகிறார்கள்.

14 வயது அன்வராவின் குடும்பத்தினர் மியான்மரில் கொல்லப்பட்டனர்.  உயிர் பிழைத்து வங்கதேசத்திற்கு தப்பி வந்த அவர், திக்கற்று திசையறியாமல் வீதியில் அலைபாய்ந்தார்.  “ஒரு வேனில் வந்த பெண், என்னுடன் வருகிறாயா என்று கேட்டார்” என்கிறார் அன்வரா.

ஆதரவற்று அலைந்துக்கொண்டிருந்த நிலையில் உதவிக்கரம் கிடைத்ததும் அதனைப் பற்றிக்கொண்டு அவர்களுடன் சென்றார் அந்த சிறுமி.  பாதுகாப்பான வாழ்க்கை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட அவர் அழைத்துச் செல்லப்பட்டதோ காக்ஸ் பஜாருக்கு.  இந்த இடம் வங்கதேசத்தில் பாலியல் தொழிலுக்கு பெயர்போன இடம்.

அதன்பிறகு நடந்ததை அன்வாரா, “அங்கு சென்ற சிறிது நேரத்தில், நான் இருந்த அறைக்கு இரண்டு இளைஞர்கள் வந்தார்கள். என்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்தார்கள்.  நான் பயந்து அலறினேன், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதால் என்னை அடித்தார்கள், கத்தியை காட்டி மிரட்டினார்கள்.  வாயை பொத்தினார்கள்.   இருவரும் என்னை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தார்கள்” என்கிறார்.

இங்கேயிருக்கும் அகதி முகாம்களில் பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்துவது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அகதிகளில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், சிறுமிகளும்தான்.  அதுவும் அவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளோ சித்தரவதைகளின் உச்சகட்டம்.

செண்ட்டல் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் பிபிசியின் ஒரு குழுவினர் இணைந்து  இதுபோன்ற முறைகேடுகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

வங்கதேச புலனாய்வு அமைப்பும் இந்த விசயத்தில் தொடர்புடைய நெட்வொர்க்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

வெளிநாடுகளில் வேலை, தலைநகர் டாக்கா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஹோட்டலில் வேலை வாங்கித்தருவதாக தங்களுக்கு ஆசை காட்டப்படுவதாக ரோஹிஞ்சா அகதிகள் கூறுகின்றனர்.

இந்த முகாம்களில் இருந்து பாலியல் தொழிலுக்காக பெண்களை அழைத்து வருவதற்கு பெரிய அளவில் சன்மானங்கள் வழங்கப்படுகின்றன. கடினமான சிக்கலான சூழ்நிலையில் அகதிகளாக தஞ்சம் புகுந்திருக்கும் இந்த சிறுபான்மையினருக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஆசைகாட்டி மோசம் செய்கின்றனர்.

14 வயது மாசுதா உள்ளூர் தர்மசத்திரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். முகாமிலிருந்து பாலியல் தொழிலுக்காக தான் கடத்தப்பட்ட கதையை வலியுடன் கூறுகிறார்.

“என்ன நடக்கப்போகிறது என்று எனக்கு தெரியும். ஒரு பெண் எனக்கு வேலை வாங்கிக் கொடுப்பதாக கூறினார். அவர் பாலியல் தொழிலுக்காக பெண்களை கொண்டுவருபவர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பெண்ணும் ஒரு ரோஹிஞ்சா முஸ்லிம் பெண்மணிதான். எங்களுக்கு அவரைப்பற்றி நன்றாக தெரிந்தாலும், எனக்கு வேறு வழியில்லை. வாழ்வா சாவா என்ற போராட்டதில் எது வெல்லும்? இந்த உயிரைக் காப்பாற்றத் தானே எல்லாவற்றையும் விட்டு ஓடிவந்தோம்?” என்கிறார் கண்ணீருடன்.

மாசுதா சொல்கிறார், “மியான்மரில் எங்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களின்போதே பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன்.  குடும்பமும் சிதறிவிட்டது.  என் குடும்பத்தில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா? இருந்தால், எங்கு இருக்கிறார்கள்? எந்த நிலையில் இருக்கிறார்கள்? அவர்களை எப்போதாவது சந்திக்கமுடியுமா? எதுவுமே தெரியாது. மியான்மரில்  எங்கள் ஊரில் சகோதரன் மற்றும் சகோதரியுடன் விளையாடுவேன். இப்போது விளையாட்டு என்றால் என்ன என்றே எனக்கு மறந்து போய்விட்டது!” என்று ஏக்கத்துடன் கூறுகிறார் மாசுதா.

தங்கள் பிள்ளைகளை மீண்டும் பார்க்கவே முடியாதோ என்று பல பெற்றோர்கள் பயப்படுகின்றனர். அதே சமயத்தில் அகதி முகாமுக்கு வெளியே வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றும் பலர் நம்புகின்றனர்.

பிபிசி புலனாய்வு

ஆனால் இந்த குழந்தைகளை யார் அழைத்துச் செல்கிறார்கள்? எங்கு கொண்டு செல்கிறார்கள்? அண்மையில் பிபிசியின் விசாரணைக் குழு, வங்கதேசத்தின் முகாம்களில் உள்ள ரோஹிஞ்சா பெண்களை சந்திக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. வெளிநாட்டினராக காட்டிக் கொண்டு பிபிசி குழுவினர் இந்த புலனாய்வில் ஈடுபட்டனர்.

48 மணி நேரத்திற்குள் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டன. இதுபற்றிய தகவல்களையும் வங்கதேச காவல்துறையினரிடம் தெரிவித்த பிறகு பிபிசி குழுவினர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள தரகர்களிடம் ரோஹிஞ்சா பெண் தேவை, வெளிநாட்டினருக்கு சப்ளை செய்ய முடியுமா என்று கேட்டனர்.

தரகர்களில் ஒருவர் சொன்னார், “எங்களிடம் பல்வேறு தரப்பட்ட இளம் பெண்கள் இருக்கிறார்கள், நீங்கள் ஏன் ரோஹிஞ்சா பெண்களை கேட்கிறீர்கள்? அவர்கள் மிகவும் மோசமானவர்கள், அழுக்கானவர்கள்” என்று சொன்னார்.

ரோஹிஞ்சா இனப்பெண்கள் பாலியல் தொழிலில் மலிவானவர்களாக கருதப்படுகின்றனர்.  அவர்களை அணுகுவது மிகவும் எளிது என்ற மனப்போக்கு நிலவுகிறது.

தரகர்களிடம் பேசும்போது, பெண்களுடன் முழு இரவையும் கழிக்க விரும்புகிறோம் என்பதை நாங்கள் சற்று அழுத்தமாகவே முன்வைத்தோம். ஒரு நெட்வொர்க்கைச் சேர்ந்த பல தரகர்கள், எங்களிடம் பல இளம்பெண்கள் பற்றி பேசினார்கள்.

13 முதல் 17 வயது வரை உள்ள பெண்களின் படங்கள் எங்கள் முன்வைக்கப்பட்டன.  விரிவான நெட்வொர்க்கும், எங்கள் முன் வைக்கப்பட்ட இளம்பெண்களின் எண்ணிக்கையும் அதிர்ச்சியூட்டியது.

அவர்கள் காட்டிய புகைப்படங்களில் இருந்த பெண்கள் பிடிக்கவில்லை என்று சொன்னதால், அவர்கள் உடனடியாக இன்னும் பல படங்களைப் கொடுத்தார்கள். பெரும்பாலான பெண்களை, தரகர்கள் தங்களுடனே வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர் யாரும் இல்லாதபோது, சமையல் செய்வது, வீட்டுவேலைகளை செய்வது என அவர்கள் பம்பரமாக வேலை செய்துக் கொண்டேயிருக்கவேண்டும். அதாவது அந்த அபலைப்பெண்களின் நிலை அடிமை என்பதற்கு சற்றும் குறைவானதல்ல.  தலைக்கு மேல் கூரை, வயிற்றுக்கு சோறு போட்டால் போதும்.

பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களை தீவிரமாக சரிபார்த்த பிறகு உள்ளூர் போலிசிடம் அவற்றை சமர்ப்பித்தோம். ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மேற்கொள்வதற்காக ஒரு சிறிய குழு உருவாக்கப்பட்டது.

தரகர்கள்

போலிஸார் தரகர்களை உடனடியாக அடையாளம் கண்டுவிட்டனர், “எங்களுக்கு இவர்களை நன்றாகத் தெரியும்” என்று சொன்னார்கள்.

போலிஸார் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை எங்களால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை. ஒருவேளை அந்த தரகர் செல்வந்தராகவோ அல்லது ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகவோ இருக்கவேண்டும்.

எங்களிடம் தரகர்கள் காட்டிய புகைப்படங்களில் இருந்து இரண்டு பெண்களின் புகைப்படங்களைக் கொண்டு ஸ்டிங் ஆபரேஷனை ஆரம்பித்தோம்.

காக்ஸ் பஜாரில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு இரவு எட்டு மணிக்கு அந்த பெண்களை அழைத்துக் கொண்டு வரசொன்னோம்.

ஃபவுண்டேஷன் செண்டினெல் அமைப்பின் வெளிநாட்டு உறுப்பினரை வாடிக்கையாளர் என்று கூறி, ஒரு மொழிபெயர்ப்பாளருடன் ஹோட்டலுக்குச் சென்றோம்.

சந்திக்கும் நேரம் நெருங்கியவுடன், தரகரும், வாடிக்கையாளராக நடித்தவரும் பலமுறை தொலைபேசியில் பேசிக்கொண்டனர்.

வாடிக்கையாளர் விடுதிக்கு வெளியே வரவேண்டும் என்று தரகர் சொன்னதை நாங்கள் மறுத்துவிட்டோம். இரு பெண்களையும் ஒரு டிரைவருடன் தரகர் எங்களிடம் அனுப்பி வைத்தார்.

பணம் கொடுக்கும்போது, “இன்று எனக்கு திருப்தியாக இருந்தால், இதேபோன்று தொடர முடியுமா?” என்று வாடிக்கையாளராக நடித்தவர் கேட்டார். முடியும் என்று டிரைவர் தலையாட்டினார்.

இதற்குப் பிறகு போலிஸ் நடவடிக்கையில் இறங்கியது. டிரைவர் கைது செய்யப்பட்டார். சிறார்களின் நலனுக்காக பணிபுரிபவர்கள் மற்றும் மனித கடத்தல் பிரச்சனைகளை தீர்த்து வைப்பவர்களின் உதவியுடன் அந்த இரு பெண்களையும் தங்க வைப்பதற்கான இடங்களைக் கண்டறிந்தோம்.

ஒரு பெண் அங்கு செல்ல மறுத்துவிட்ட நிலையில், மற்றொரு பெண் அங்கு செல்ல ஒப்புக்கொண்டார்.

வறுமைக்கும், உயிருக்கும் இடையே ஊசல்

வறுமைக்கும் உயிருக்கும் இடையே ஊசலாடும் பெண்கள் உடலை முதலீடாகக் கொண்டு பிறர் தொழில் செய்து லாபம் சம்பாதிக்கின்றனர்.  வயிறை வளர்க்க உடலை பிணையாக வைக்க வேண்டிய நிலையில் இருக்கும் பெண்கள்.  முதலில் முரண்டு பிடித்தாலும், உணர்வுகளை மழுங்கடிக்க எண்சாண் வயிறு இருக்கிறதே என்று அந்த பெண்கள் சொன்னார்கள்.

பெண்களையும், சிறுமிகளையும் சர்வதேச எல்லைக்கு அருகில் இருந்து கொண்டுவர வலுவான நெட்வொர்க் தேவைப்படுகிறது.

இதற்கு இணையம் உதவுகிறது. இண்டர்நெட் மூலம், ஆள்கடத்தல் குற்றம் முறையாக நிர்வகிக்கப்படுகிறது.  இதில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், ‘செக்ஸ்’ விற்பனைக்கும் இண்டர்நெட்டே அடிப்படையாக இருக்கிறது.

ரோஹிஞ்சா இனத்தை சேர்ந்த சிறார்கள், வங்கதேசத்தில் டாக்கா, சிட்டகாங், நேபாளில் காத்மாண்டு, இந்தியாவில் கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப்படுவதை கண்டறிந்தோம்.

கொல்கத்தாவில் பாலியல் தொழிலில் அவர்களை ஈடுபடச் செய்யும்போது அவர்களுக்கு இந்திய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.  இது அவர்களின் உண்மையான அடையாளத்தையே மாற்றிவிடுகிறது.

டாக்காவில் உள்ள சைபர் குற்றப்பிரிவைச் சேர்ந்தவர்கள், மனித கடத்தல் இண்டர்நெட்டில் எப்படி நடைபெறுகிறது என்று எங்களிடம் விவரித்தார்கள்.

டார்க் வெப்

பேஸ்புக்கில் குழுக்கள் உருவாக்கப்பட்டு, பொதுப்பார்வைக்கு தெரியாமல் ரகசியமாக பாலியல் தொழில்கள் தொடர்பான தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.

‘டார்க் வெப்’ பற்றியும் அவர்கள் சொன்னார்கள்.  அதில் மறைகுறியாக்கப்பட்ட வலைதளங்கள் (Encrypted websites) இதுபோன்ற முறைகேடுகளை சுலபமாக்கிவிடுகின்றன.

டார்க் வெப்பின் ஒரு பயனாளி,  நெருக்கடியில் சிக்கி அகதிகளாக இருக்கும் ரோஹிஞ்சா குழந்தைகளை எப்படி பயன்படுத்தி கொள்ளலாம் என்ற வழிமுறைகளை விளக்கமாக சொல்கிறார்.

இந்தக் குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க சிறந்த இடம் எது என்பதைப் பற்றியும் அவர் தெளிவாக கூறுகிறார்.

இந்த பதிவை இணையதளத்திலிருந்து இப்போது அரசு நீக்கிவிட்டது. மனிதக் கடத்தல்காரர்களுக்கும் பாலியல் ரீதியாக குழந்தைகளை சுரண்டுவதற்கும் அகதிகள் பிரச்சனை வசதியாக போய்விட்டது என்பதை இந்த ஸ்டிங் ஆபரேஷன் எங்களுக்கு உணர்த்தியது.

வங்கதேசத்தில் ஆன்லைனில் மட்டுமல்ல, ஆஃப்லைனிலும் மனித கடத்தலுக்கான வலை விரிக்கப்பட்டுள்ளது.  இந்த வலை வலுவாகி, உடைக்கமுடியாத இரும்பு வலையாகிவிடக்கூடாது என்பதே இப்போதைய கவலை.

ரோஹிஞ்சா பிரச்சனைக்கு வங்கதேச செக்ஸ் இண்டஸ்ட்ரி காரணம் இல்லை, ஆனால் அந்த பிரச்சனையின் பக்கவிளைவுகளில் இருந்து அந்தத்துறை பலனை அனுபவிக்கிறது.  ரோஹிஞ்சா பிரச்சனை வங்கதேசத்தில் பாலியல் தொழிலை விரிவடையச் செய்திருப்பதை மறுக்கமுடியாது.

(யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இந்த கட்டுரையில் புனைபெயர்களையே பயன்படுத்தியிருக்கிறோம்.)

-BBC_Tamil