சிரியா: அரசு கட்டுப்பாட்டில் 70 சதவீத கிழக்கு கூட்டா

டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளில் சிரிய அரசு தனது கட்டுப்பாட்டை அதிகப்படுத்தி வரும் நிலையில், கிழக்கு கூட்டாவின் பல்வேறு நகரங்களில் உள்ள சிரிய கிளர்ச்சியாளர் குழுக்கள் வெளியேறி வருகின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி நகரமான டூமாவில் இருந்து போராளிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பலரும் பேருந்துகள் மூலம் சனிக்கிழமையன்று வெளியேறினர்.

அரசு படைகள் மற்றும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கு ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து, இந்த வெளியேற்றம் நடைபெற்றது.

கிழக்கு கூட்டாவின் சுமார் 70 சதவீத பகுதிகள் தற்போது அரசு கட்டுப்பாட்டில் உள்ளது.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுடன், சிரிய அரசு படைகள் நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

உடன்படிக்கைக்கு கிளர்ச்சியாளர்களை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தும் வகையில், கிழக்கு கூட்டா மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

அரசு படைகள் மற்றும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் குழுவின் தலைவர் ஃபாய்லக் அல்-ரஹ்மான் ஆகிய இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் இட்லிப் மாகாணத்துக்கு கொண்டு செல்லப்படுவர். வெளியேற்ற நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமையன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளர்ச்சியாளர்களால் கைவிடப்பட்ட நகரங்களில் சிரிய துருப்புகள் நுழைந்த காட்சிகளை சிரிய தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியது.

கடந்த வாரம் ஏற்பட்ட மற்றொரு உடன்படிக்கையை தொடர்ந்து, ஹரஸ்டா நகரத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். -BBC_Tamil