துப்பாக்கி கட்டுப்பாட்டை வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் பிரமாண்ட பேரணி

அமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக அந்நாடு முழுவதும் நடைபெறும் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

“மார்ச் பார் அவர் லைவ்ஸ்” என்று பெயரிட்டுள்ள மாணவர் வழிநடத்தும் இந்தப் பேரணியானது, கடந்த மாதம் ஃபுளோரிடாவிலுள்ள பள்ளியொன்றில் துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு உருவானது.

பாதி தானியங்கி துப்பாக்கிகளில் இணைத்து வேகமாக சுடுவதற்கு தேவையான பம்ப் ஸ்டாக்குகளை தடைசெய்ய உள்ளதாக வெள்ளிக்கிழமையன்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

பாதி தானியங்கி துப்பாக்கிகளை, இயந்திர துப்பாக்கியாக மாற்றி அமைக்க உதவும் ஓர் உதிரிபாகம்தான் பம்ப் ஸ்டாக்.

ஆனால், பல ஆர்வலர்கள் இன்னும் விரிவான சட்டத்தை உருவாக்க அழைப்பு விடுகின்றனர்.

அமெரிக்கா முழுவதும், வெளிநாடுகளிலும் 800 பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

லண்டன், எடின்பர்க், ஜெனீவா மற்றும் சிட்னி போன்ற உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நகரங்களிலும் துப்பாக்கி கட்டுப்பாட்டை கடுமையாக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக பேரணிகள் நடைபெறுகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி பார்க்லாந்திலுள்ள உயர்நிலை பள்ளியொன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்கா முழுவதும் துப்பாக்கிகளுக்கு எதிராக பொதுமக்களுக்கிடையே கிளம்பிய சீற்றத்தை அடிப்படையாக கொண்டு அமெரிக்க அரசியல்வாதிகள் துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ஆயுதங்களின் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

வாஷிங்டனில் நடைபெறும் பேரணியில் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும், அது கடந்தாண்டு பெண்கள் நடந்திய பேரணிக்கு பிறகு நடைபெறும் பெரிய பேரணியாக இருக்குமென்றும் இதன் அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். -BBC_Tamil