மூத்த வட கொரிய அதிகாரி ஒருவருடன் ரயில் ஒன்று பீஜிங்கிற்கு வந்துள்ளது என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மூன்று பெயர் வெளியிடப்படாத நபர்கள் தந்த தகவல்படி அது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னாக இருக்கலாம் என ப்ளூம்பர்க் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனா, வட கொரியாவின் ஒரே முக்கிய கூட்டாளி ஆனால் வட கொரியா அணு அயுத சோதனைகளில் ஈடுபட்டதால் ஏற்பட்ட பதற்றங்களால் இருநாட்டு உறவில் விரிசல்கள் ஏற்பட்டன.
பதவியேற்ற ஏழு வருடங்களில், கிம் வட கொரியாவை விட்டு சென்றதில்லை என நம்பப்படுகிறது.
இந்த செய்தி குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இல்லை. சீனா மற்றும் வட கொரிய அரசு ஊடகங்களிலும் இதுகுறித்த எந்த செய்தியும் இல்லை.
ஆனால் இது உறுதியானால் இருநாட்டு உறவிலும் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்படும்.
சம்பந்தப்பட்ட நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை கண்காணித்து வருவதாகவும் திங்களன்று தென் கொரிய அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
பச்சை நிறத்தில் மஞ்சள் கோடுகள் கொண்ட ரயில் போல் டோக்கியோவை சேர்ந்த நிப்பான் நியூஸ் நெட்வொர்க் வெளியிட்ட வீடியோவில் தெரிகிறது.
இது கிம்மின் தந்தையும், முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல், பீஜிங் வந்தபோது பயன்படுத்திய வண்டியை போல் இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கிம் ஜாங் இல் சீனா வந்த சமயத்தில் அவர் சீனாவில் இருந்து புறப்பட்ட பிறகே அவரின் பயணம் உறுதி செய்யப்பட்டது.
திங்களன்று சில வழக்கத்திற்கு மாறான காட்சிகளை கண்டதாக ரயில் நிலையத்திற்கு வெளியே கடை வைத்திருக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்..
ரயில் நிலையத்தை சுற்றி போலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர் என்றும் ரயில் நிலையத்திற்கு உள்ளே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்றும் ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
போலிஸாரின் பாதுகாப்புடன் மோட்டார் வாகனம் ஒன்று ரயில் நிலையத்திலிருந்து சென்றதாக ராயட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. -BBC_Tamil