அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, ஒயின் உட்பட பல பொருட்களுக்கு வரி விதித்துள்ள சீனாவை வெள்ளை மாளிகை கண்டித்துள்ளது.
மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் எஃகு மற்றும் அலுமனியம் ஆகியவற்றுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதை தொடர்ந்து சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் 128 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதித்துள்ளது.
அமெரிக்காவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்புகளில் ஏற்படும் இழப்புகளை சரி செய்வதற்கான முயற்சி இது என சீனா தெரிவித்துள்ளது.
இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவுகள் ஏற்பட்டன.
“சர்வதேச சந்தையை சீனா சீர்குலைப்பதாக” சீனா மீது வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவின் மானிய விலைகள் மற்றும் அதிக உற்பத்தி ஆகியவைதான் எஃகு நெருக்கடிக்கு காரணம் என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் லிண்ட்ஸே வார்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
முறையாக நடைபெறும் அமெரிக்க இறக்குமதிகள் மீது கவனம் செலுத்துவதை விடுத்து, சர்வதேச சந்தையை சீர்குலைக்கும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு கெடுதல் விளைவிக்கும் முறையற்ற சீன வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருதரப்பிலும் மேற்கொள்ளபடும் நடவடிக்கைகள், சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் விரிசல்களை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் சீனாவை “பொருளாதார எதிரி” என டிரம்ப் விவரித்துள்ளார். -BBC_Tamil