சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1,300 பொருட்களின் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி விதிகப் போவதாக அறிவித்துள்ளது சீனா.
சோயாபீன்ஸ், கார்கள் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு உள்பட 106 அமெரிக்க பொருட்களின் மீது 25 சதவீதம் அதிக வரி விதிக்கப்போவதாக சீனா தெரிவித்திருக்கிறது.
1,300 சீனப் பொருட்களுக்கு 25 சதவீத அதிக வரி விதிக்கும் விவரங்களை அமெரிக்கா அறிவித்த சில மணிநேரத்தில், பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
அமெரிக்கா அதிக வரி விதிக்கப்போவதாக குறிப்பிட்டுள்ள பொருட்களில் சீனாவில் செய்யப்படுகிற தொலைக்காட்சிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அடங்குகின்றன.
சீனாவின் நியாமற்ற அறிவுசார் சொத்துரிமைக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைதான் தங்களின் அதிக வரி விதிப்பு முன்மொழிவு என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சீனாவின் மிக விரைவான நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டளர்களால், ஐரோப்பாவின் பங்கு சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன.
நியூயார்க்கில் த டவ் ஜோன்ஸ் பங்குச் சந்தை 550 புள்ளிகள் குறைவாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள வரி விதிப்பை கடுமையாக கண்டிப்பதாகவும், வலுவாக எதிர்ப்பதாகவும் தெரிவித்த சீனா, இதனை ஒருதலைப்பட்ச மற்றும் பாதுகாப்புவாத நடவடிக்கை என்றும், இதற்கு பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தது.
சீனா வரி விதிப்பதாக தெரிவித்திருக்கும் பொருட்கள் 2017ம் ஆண்டு 5,000 கோடி டாலர் வர்த்தக மதிப்புடையதாக இருந்தது என்று சீன வணிக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க ரசாயனங்கள், சில வகை விமானங்கள் மற்றும் மக்காச்சோள பொருட்கள் ஆகியவை இந்த வரி விதிப்புக்கு உட்படுவதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
விஸ்கி மது, சிக்ரெட் மற்றும் புகையிலை, சில மாட்டிறைச்சி வகைகள், உராய்வு நீக்கிகள், புரப்பேன் எரிபொருள் மற்றும் பிற பிளாஸ்டிக் பொருட்களுக்கு மேலதிக வரியும் விதிக்கப்படும்.
அமெரிக்க ஆரெஞ்சு பழச்சாறு, குறிப்பிட்ட சோளப் பொருட்கள், பருத்தி மற்றும் சில கோதுமை பொருட்களும், டிரக்குகள், சில எஸ்யுவி மற்றும் குறிப்பிட்ட மின்சார வகனங்கள் மீதும் புதிய வரிகள் விதிக்கப்படுகின்றன என்று இந்த அமைச்சகம் கூறியுள்ளது.
சீனப் பொருட்களின் மீது அதிக வரிகளை விதிக்கின்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை, சீனாவை அதே மாதிரியான நடவடிக்கை எடுக்க தூண்டி, அமெரிக்க வாடிக்கையாளர்கள் விலை உயர்வை சந்திக்க செய்யும் என்று பொருளியலாளர்கள் முன்னதாக எச்சரித்துள்ளனர்.
“வெற்றியாளர் இல்லை”
அமெரிக்கா சீனப் பொருட்களின் மீது விதிக்க திட்டமிட்டுள்ள வரி விதிப்பு, சீனாவின் அறிவுசார் சொத்துரிமை நடைமுறைகள் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்த ஆணையிட்ட விசாரணையின் விளைவாக வந்ததாகும்.
சீன நிறுவனங்களோடு தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள அமெரிக்க நிறுவனங்கள் அழுத்தம் கொடுப்பது போன்ற பிரச்சனைகளுக்கு சான்றுகளை இந்த விசாரணையில் கண்டுபிடித்துள்ளதாக கடந்த மாதம் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
5,000 கோடி மதிப்பிலான சீன இறக்குமதி பொருட்களில் இந்த வரி விதிப்பு பொருந்தும் என்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை கையாளும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதித்துவ அலுவலகம் கூறியுள்ளது.
அமெரிக்க பொருளாதரத்தை பாதிப்பது என்றும், பாதிப்பு ஏற்படுத்தும் சீனாவின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை நீக்கவும் போதுமானதாக மதிப்பிடப்பட்ட தொகை இதுவென அது குறிப்பிட்டுள்ளது.
தொடர்புத்துறை செயற்கைகோள்களின் ஒரு பகுதி, அரை மின்கடத்திகள், விமான கருவிகள் மற்றும் பானங்கள் தயாரிக்கும் எந்திரமும், பேக்கரி ஓவன்கள் மற்றும் ராக்கெட் ஏவுகணைகள் போன்ற முக்கிய தயாரிப்புகளும் இந்தப் பட்டியலில் அடங்குகின்றன.
இறுதிப் பட்டியல் பொது மக்களின் கருத்துக்களை பெற்ற பின்னர் சுமார் 3 மாதங்களுக்குள் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகப் போரை விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கும் சீனா, அமெரிக்க அழுத்தங்களுக்கு பணிந்து போதில்லை என்பதில் உறுதியாக உள்ளது.
“அச்சுறுத்தியோ, மிரட்டியே சீனாவை பணிய செய்துவிடலாம் என்கிற முயற்சி ஒருபோதும் வெற்றியடையாது” என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் கெங் ஷூயாங் கூறியுள்ளார்.
“வர்த்தகப் போரில் வெற்றிப்பெறுபவர் யாருமில்லை. அதனை தொடங்கும் நாடு தன்னையும், பிறரையும் பாதிப்புக்குள்ளாக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பற்றி உலக வர்த்தக நிறுவனத்தில் முறையிட்டுள்ளதாக கெங் தெரிவித்துள்ளார்.
தீர்வுக்கு நம்பிக்கை
வெளிநாடுகளில் விற்கப்படும் பொருட்களை நம்பியே சீனப் பொருளாதாரம் இருக்கிறது என்கிற நிலைமை சமீபத்திய ஆண்டுகளில் குறைந்திருக்கிறது. இது அமெரிக்க சுங்கவரி விதிப்பின் விளைவுகளை மழுங்கச் செய்யும் என்று எஸ்&பி உலக தர மதிப்பீட்டு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2016ம் ஆண்டு சீன ஏற்றுமதி பொருட்களில் 18.2 சதவீதத்தை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது என்று அமெரிக்க வர்த்தக துறை தெரிவிக்கிறது.
வரி விதிப்பின் மூலம் எழுகின்ற சர்ச்சை அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால், இரு நாடுகளும் பிரச்சனையை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண வேண்டும் என்று அமெரிக்க வணிக குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.
“சீனாவோடு இருக்கும் வர்த்தக உறவில் சமத்துவத்தையும், நியாயத்தையும் மீட்டெடுக்க இந்த நிர்வாகம் சரியான கவனம் செலுத்துகிறது” என்று அமெரிக்க வணிக சேம்பர் கூறியுள்ளது.
“இருப்பினும், அமெரிக்க வாடிக்கையாளர்களாலும், வேலைவாய்ப்பு உருவாக்குவோராலும் தினமும் பயன்படுத்தப்படும் பொருட்களில் வரி விதிப்பது இந்த நோக்கங்களை பெறுவதற்கு உதவாது” என்றும் அது தெரிவித்துள்ளது. -BBC_Tamil