இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் 8 பாலத்தீனர்கள் பலி, 250 பேர் காயம்

இஸ்ரேல் எல்லையில் பாலத்தீனர்கள் புதிதாக நடத்தியுள்ள போராட்டங்களின்போது, இஸ்ரேல் படைப்பிரிவுகள் நடத்திய தாக்குதலில் எட்டு பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 250க்கும் மேலானோர் காயமடைந்ததாகவும் பாலத்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் முன்னணி பாதுகாப்பு அரண்களை அணுகியோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

5 இடங்களில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கண்ணீர் புகை குண்டுகளை இஸ்ரேல் படைப்பிரிவுகள் பயன்படுத்தியுள்ளன.

இப்போது இஸ்ரேலில் இருக்கும் தங்களுடைய முன்னோரின் நிலங்களுக்கு திரும்பி வர அகதிகளையும், அவர்களின் வழித்தோன்றல்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பாலத்தீனர்கள் கோரி வருகின்றனர்.

எல்லையை தாக்கி, இஸ்ரேல் மக்களை கொல்ல ஹமாஸ் தீவிரவாத குழு காசா மக்களை தூண்டிவிடுவதாக இஸ்ரேலின் செய்தி தொடர்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இதே போன்ற ஆர்ப்பாட்டங்களின்போது, இஸ்ரேல் ராணுவம் 16 பேரை சுட்டு கொன்றதோடு, ஆயிரத்திற்கு மேற்பட்டோரை காயப்படுத்தியது. -BBC_Tamil