லாரி ஒன்றும், கனடா இளையோர் பனி ஹாக்கி அணி பயணித்த பேருந்து ஒன்றும் மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டதாக கனடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சஸ்காட்சவான் மாகாணத்தில் டிஸ்டாலின் வடக்கில், நெடுஞ்சாலை 35ல் “ஹம்போல்ட் ப்ரோன்கோஸ்” ஹாக்கி அணியினர் பயணித்துக் கொண்டிருந்தனர்.
மொத்தம் 28 பேர் பயணித்த இந்தப் பேருந்தில், அதன் ஓட்டுநர் உள்பட 14 பேர் இந்த விபத்தில் இறந்துள்ளதாக ராயல் கனடியன் மவுண்ட்டட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இதர 14 பேரில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.
கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “இவர்களின் பெற்றோர் அனுபவிக்கும் துன்பத்தை என்னால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
சஸ்காட்சவான் மாகாணத்தின் இளையோர் ஹாக்கி போட்டியின் பிளே ஆஃப் சுற்றில் நிபாவின் ஹௌக்ஸ் அணியோடு மோதுவதற்காக ஹம்போல்ட் ப்ரோன்கோஸ் அணியினர் பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். இந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் 16 முதல் 21 வரை வயதுடையோர் என்று இந்த அணியின் பட்டியல் காட்டுகிறது. -BBC_Tamil