ரசாயன தாக்குதலுக்கு சிரியா அதிபர் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் – டிரம்ப் எச்சரிக்கை

சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன.

கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பாதுகாப்பு கருதி அங்குள்ள பொதுமக்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியேறி விட்டனர்.

கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 80-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்துள்ளது.

ஆனால், சிரியா படைகள் ரசாயன தாக்குதல்களில் ஈடுபட்டதாக வெளியாகிவரும் செய்திகளை ரஷியா வன்மையாக மறுத்துள்ளது.

இந்நிலையில், சிரியாவில் அரசுப் படைகள் நடத்திய ரசாயன தாக்குதலில் 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் இதற்கு மிகப்பெரிய விலையை தர வேண்டி இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று எச்சரித்துளார்.

இதுதொடர்பாக, டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ள டிரம்ப், ’சிரியாவின் மதிகேடான ரசாயன தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை வெளியுலகத்தினர் பார்க்க முடியாதவாறு அங்கு சிரியா ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பஷர் அல் ஆசாத் என்னும் மிருகத்தை ஆதரித்துவரும் ரஷியாவும், ஈரானும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும், இதற்கு மிகப்பெரிய விலையை தர வேண்டி இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

-athirvu.com