நாட்டின் பொருளாதாரத்தை விரிவுப்படுத்த சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதி ஏற்ற நிலையில், ஒரு பனிப்போர் மனநிலைக்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆசியாவின் டாவோஸ் என அறியப்படும் ஆசியாவுக்கான புவா மன்றத்தில் , ஷி ஜின்பிங் ஆற்றிய உரை அமெரிக்காவுடனான வர்த்தக போர் குறித்த பிரச்சனையை அமைதிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
சீனாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக கார்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்கவும், தேவைகளை தளர்த்தவும் அவர் உறுதியளித்தார்.
ஆனால், அவர் கூறிய இந்த மாற்றங்கள் எப்போது நிகழும் என்பது குறித்த சில குறிப்பீடுகள் மட்டுமே அந்த உரையில் இடம்பெற்றிருந்தது.
‘பனிப்போர் மனநிலை காலாவதியாகிவிட்டது’
அமெரிக்கா – சீனா இடையே தற்போது நடந்துகொண்டிருக்கும் வணிக போர் குறித்து ஷி ஜின்பிங் குறிப்பிட்ட கருத்துகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்பின் ‘முதலில் அமெரிக்கா’ என்ற நிலைப்பாட்டை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று ஷி அழைப்பு விடுத்தார்.
”திறக்க வேண்டுமா அல்லது மூட வேண்டுமா, முன்னேறி செல்ல வேண்டுமா அல்லது பின்னோக்கி செல்ல வேண்டுமா என்பது குறித்த முக்கிய தேர்வுகளை எதிர்கொண்டு வருகிறது,” என்று மன்றத்தில் கூடியிருந்த சீன மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஷி உரையாற்றினார்.
”தற்போதைய உலகில் அமைதி மற்றும் ஒத்துழைப்பு என்பது முன்னோக்கி செல்கிறது. அதே சமயம், பனிப்போர் மனநிலையும், பூஜ்ய நன்மை சிந்தனைகளும் காலாவதியாகிவிட்டன.” என்று பேசினார். -BBC_Tamil