சிரியா தாக்குதல் எதிரொலி: லத்தீன் அமெரிக்க பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்

சிரியாவில் நடைபெற்று வரும் அண்மைய சம்பவங்களில் மிகுந்த கவனம் செலுத்துவதற்காக, வெள்ளிக்கிழமை லத்தீன் அமெரிக்கா செல்வதற்கு திட்டமிட்டிருந்த பயணத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.

சிரியாவில் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலுக்கு அமெரிக்கா வழங்கும் பதில் நடவடிக்கையை மேற்பார்வை செய்ய டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

சிரியாவின் டுமா நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் பதிலடி வழங்கும் என்று டிரம்ப் உறுதி அளித்திருந்தார்.

ஒருங்கிணைந்த வகையில் மேற்குலக நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுக்கும் நோக்கில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸோடு டிரம்ப் உரையாடி வருகிறார்.

சிரியாவின் கூட்டாளி நாடாகிய ரஷ்யாவும், அமெரிக்காவும் இந்த தாக்குதல் பற்றி தனித்தனியாக புலனாய்வு நடத்தி வருகின்றன.

ரசாயன தாக்குதல் என்று கூறப்படும் இந்த தாக்குதல் நடத்தியதை மறுத்துள்ள சிரியா, டுமாவில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.

இந்த தாக்குதலை நடத்தியவரை கண்டுபிடிப்பதற்கு விசாரணை மேற்கொள்ள வேண்டுமென அமெரிக்கா கேட்டுள்ளது. -BBC_Tamil