எதிர்கட்சி தலைவர் பதவி வகித்த திரு.அமிர்தலிங்கத்தை அந்த பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நீக்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்ததனாலேயே பிரபாகரன் உருவானதாக சுகாதார போசாக்கு மற்றும் ஊடக பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.
எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் தற்போது அந்த பதவியை வகிக்கின்றார். எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் பாராளுமன்றத்தில் எம்முடன் செயற்படுவதை முன்னிட்டு நாம் மகிழ்ச்சியடையவேண்டும். இது நல்லிணக்கத்திற்கு முக்கியமானதாகும்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்கட்சியினரின் – எதிர்கட்சி தரப்பில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பின்னர் அங்கத்தவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் கூட்டு எதிர்கட்சிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமருக்கு எதிராக அந்த பிரேரணையைகொண்டு வந்தோர் தோல்வியடைந்துள்ளனர். தமக்கு எதிரான ஊழல் தொடர்பான வழக்குகளை தவிர்த்து கொள்வதற்காகவே இந்த பிரேரணையை கொண்டு வந்தனர்.
இது தேவையற்ற ஒன்றாகும் என்று கட்சிக்குள்ளேயே விமர்சிக்கின்றனர் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
-tamilcnn.lk