மியான்மருக்கு “நாடு திரும்பியது முதல் ரோஹிஞ்சா அகதி குடும்பம்”

தற்போது ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் மியான்மர் திரும்புவது பாதுகாப்பானது இல்லை என ஐ.நா எச்சரித்துள்ளபோதும், வங்கதேசத்தில் இருந்து திரும்பி வந்த முதல் ரோஹிஞ்சா அகதிகள் குடும்பம் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரில் நடந்த வன்செயல்களால், சுமார் 7 லட்சம் ரோஹிஞ்சாக்கள் எல்லை தாண்டி தப்பிச் சென்றனர்.

இந்த வன்முறைகளை, “இன சுத்திகரிப்பு என்பதற்கான மிகச் சரியான எடுத்துக்காட்டு” என்று ஐ.நா கூறியது. இந்தக் குற்றச்சாட்டை மியான்மர் மறுத்தது.

சனிக்கிழமையன்று 5 நபர்கள் கொண்ட அகதிகள் குடும்பம் “மீள் குடியேற்ற முகாமிற்கு” வந்ததாகவும், அவர்களுக்கு தினசரி தேவைகள் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் மியான்மர் தெரிவித்துள்ளது.

இது உறுதி செய்யப்பட்டால், இந்த பிரச்சனை தொடங்கியதில் இருந்து மியான்மருக்கு திரும்பி வந்த முதல் ரோஹிஞ்சா குடும்பம் இதுவாகவே இருக்கும்.

இந்நிலையில், ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா போராளிகளுக்கு எதிரான நியாயமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மியான்மர் அரசு கூறியுள்ளது.

முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில் 10 ரோஹிஞ்சா ஆண்களை கொலை செய்ததற்காக ஏழு ராணுவ வீரர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கொலைகள், பாலியல் வன்புணர்வு, கிராமங்களை எரிப்பது என பல்வேறு விஷயங்கள் ரக்கைன்மாகாணத்தில் தங்களுக்கு எதிராகப் பரவலாக நடந்ததாக வங்கதேசத்திற்கு தப்பிச் சென்ற அகதிகள் தெரிவித்தனர்.

திரும்பியவர்களுக்கு என்ன பாதுகாப்பு?

நிக் பேக்கே, மியான்மர் செய்தியாளர்

மியான்மர் அரசாங்கம் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் அந்நாட்டு தேசிய கொடி பிண்ணனியில் இருக்க, ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவது போன்ற புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தது.

அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, ராணுவ அதிகாரிகள் அவர்களை நேர்காணல் செய்தனர்.

யார் இவர்கள்? ஏன் நாடு திரும்பினார்கள்? அவர்கள் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?

மியான்மர் ராணுவத்தால் பாதிக்கப்பட்டு, அகதிகளாக வங்க தேசத்தின் காக்ஸ் பசார் பகுதிக்கு வந்துள்ள ரோஹிஞ்சாக்கள் பலரும் பர்மிய ராணுவம் நடத்திய கொடும் வன்புணர்வுகள், கொலைகள் பற்றி குறிப்பிடுகின்றனர். அவர்கள் யாரும் இப்போது வீடு திரும்ப விரும்பவில்லை. அதையும் மீறி திரும்பும் சிலர், இடப்பெயர்வு முகாம்களில் மட்டுமே தங்க வைக்கப்படுவார்கள். முந்தைய வன்செயல்களின்போது அகதிகளாகச் சென்று திரும்பி வந்தவர்களுக்கு அதுதான் நடந்தது.

அவர்களுக்கு வழங்கப்படும் சரிபார்ப்பு அட்டைகள், அங்கு வாழ்வதற்கான குடியுரிமையை அளிக்காது. வங்க தேச முகாம்களில் உள்ள ரோஹிஞ்சா தலைவர்கள் இந்த அட்டை முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. மியான்மர் அரசு வெளியிட்டப் புகைப்படங்களில் ஒரு ‘முஸ்லிம்’ குடும்பம் தேசிய சரிபார்ப்பு அட்டையைப் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசு ரோஹிஞ்சா என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை.

இந்த குடும்பம் நாடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்ட முன்தினம்தான், அகதிகள் “பாதுகாப்பாக, கண்ணியமாக, நீடித்த முறையில்” திரும்பி வருவதற்கு ஏற்ற நிலைமைகள் மியான்மரில் தற்போது இல்லை என்று ஐ.நா அகதிகள் அமைப்பு எச்சரித்திருந்தது.

-BBC_Tamil