சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியாவும், புரட்சிப்படைக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சிரிய ராணுவம் ரசாயன குண்டுகளை வீசுவதாக கூறி அதை தடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்சு கூட்டு படைகள் சிரியா மீது நேற்று முன்தினம் அதிகாலை தாக்குதல் நடத்தின.
ஏவுகணை மூலமும், விமானம் மூலமும் குண்டு வீசியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிரியாவில் உள்ள ரசாயான ஆயுத தயாரிப்பு கூடம், ரசாயன ஆயுத கிடங்கு ஆகியவை அழிக்கப்பட்டன.
சிரியாவுக்கு தொடர்ந்து ரஷியா ஆதரவு அளித்து வருவதை தடுக்கும் வகையில் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ரஷியா மீது பல பொருளாதார தடைகளை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது.
இப்போது புதிதாக மேலும் பொருளாதார தடைகள் கொண்டுவர இருப்பதாக ஐ.நா.வுக்கான அமெரிக்கா தூதர் நிக்கி ஹாலே கூறினார். இந்த அறிவிப்பு இன்றே வெளிவர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, இதற்கு மேலும் சிரியா ரசாயன தாக்குதலை நடத்தக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் தான் நாங்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறோம். மேலும் சில நாடுகளுடன் அவர்கள் சேர்ந்து கொண்டு அத்துமீறலை நடத்தக்கூடாது என்பதை எச்சரிக்கும் வகையிலும் தாக்கி இருக்கிறோம்.
சிரியாவில் எங்களுடைய நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கும். அங்கு தீவிரவாத குழுக்கள் அழிக்கப்பட வேண்டும். ரசாயன ஆயுதங்கள் தாக்குதல் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய முக்கிய நோக்கமாகும்.
இந்த தாக்குதல் மூலம் நாங்கள் குறிப்பிட்ட இலக்கை முடித்து இருக்கிறோம். இதற்கு மேலும் சிரியா இதேபோன்று நடந்து கொண்டால் அதற்கும் பதிலடி கொடுக்கப்படும் என்று நிக்கிஹாலே கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது, நாங்கள் திட்டமிட்ட பணியை முழுமையாக முடித்துள்ளோம். எங்களுடைய ராணுவமும், கூட்டுப்படைகளும் சரியாக செயல்பட்டுள்ளது. இதே போன்ற நடவடிக்கைகள் மேலும் நடைபெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையை ரஷிய அதிபர் புதின் கண்டித்துள்ளார். தாக்குதல் நடந்ததுமே அவர் ஈரான் அதிபர் ஹசன்ருகானியை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து அதிபர் மாளிகையில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அதிபர் புதின் ஈரான் அதிபரிடம் பேசி இருக்கிறார். மேற்கத்திய நாடுகளுடைய அத்துமீறல் நடவடிககைகள் சிரியாவில் அரசியல் தீர்வுக்கு எதிராக அமைந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச உறவில் குந்தகத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-athirvu.com