போர் அபாயத்தை கட்டுக்குள் கொண்டு வர சிரியாவில் படைகளைக் குவிக்க சவுதி அரேபியா திட்டம்

போர் சூழலில் சிக்கியுள்ள சிரியாவில் தங்கள் படைகளை குவிக்க சவுதி அரேபியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாளேடு ஒன்று  வெளியிட்ட தகவலின் அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் மற்றும் கதார் நாடுகளை சேர்ந்த தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிரியாவுக்காக பில்லியன் கணக்கில் டாலர்களின் பங்களிப்பு வேண்டும் எனவும், அதேபோன்று அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ உதவியும் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை பரிசீலனையில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், 2011 ஆம் ஆண்டு சிரியா போர் துவங்கிய காலகட்டத்தில் இருந்தே அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சவுதி அரேபிய வெளி விவகார அமைச்சர் அடேல் அல் ஜுபிர்  தெரிவித்துள்ளார்.

சிரியாவுக்கு ராணுவத்தை அனுப்புவது என்பது இது முதன்முறை அல்ல எனவும், சர்வதேச கூட்டுப்படை ஒன்றை அமெரிக்கா அமைக்கும் எனில் அதில் சவுதி அரேபியாவும் பங்கு பெறும் என ஒபாமா காலத்திலேயே ஒப்பந்தம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று அமெரிக்க கூட்டுப்படைகள் சிரியா மீது திடீர் வான்வழி தாக்குதல் மேற்கொண்டதன் பின்னரே சவுதி குறித்த முடிவுக்கு வந்துள்ளது. சிரியா மீதான தாக்குதலின் நோக்கம் வெற்றி பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், சிரியாவில் உள்ள முக்கிய ரசாயன ஆலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அது  மட்டுமின்றி குறித்த தாக்குதலுக்கு முன்னர் ரஷ்யாவுடன் அமெரிக்க அதிகாரிகள் கலந்து பேசியதாகவும், ரஷ்ய ராணுவ தளவாடங்கள் மீதோ, ராணுவத்தினர் மீதோ எவ்வித அபாயமும் ஏற்படாதவாறு குறித்த தாக்குதல் இருக்க வேண்டும் என கவனமுடன் திட்டமிடப்பட்டதாகவும், அதனாலையே ரஷ்ய ஜனாதிபதி புடின் இதுவரை பகிரங்கமாக எவ்வித குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

-dailythanthi.com