அடுத்த வாரம் வடகொரிய மற்றும் தென்கொரிய நாட்டு உயர் அதிகாரிகள் இரு நாட்டு எல்லையில் உள்ள பான்ஜுன்மோன் நகரில் சந்தித்து உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்நிலையில் இரு நாட்டு அரசியல் உறவு வலுப்படவென வெள்ளிக்கிழமை தமக்கிடையே ஹாட்லைன் சேவையை ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து தென்கொரிய அதிபர் அலுவலகம் வெளியிட்ட தகவலில் சியோல் அதிபரின் புளூ இல்லத்தில் இருந்து பியாங்யாங்கின் சக்தி வாய்ந்த வெளிவிவகார அமைச்சு கமிசனுக்கு இடையே இந்த ஹாட்லைன் நிறுவப் பட்டு பரீட்சை அழைப்பும் வெற்றிகரமாக நிகழ்த்தப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த வெள்ளிக்கிழமை பான்ஜுன்மோன் நகரில் இரு நாட்டுத் தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசவுள்ள நிலையில் அதற்கு முன்பு இந்த ஹாட்லைன் மூலம் நேரடியாக முதன்முறை பேசவுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது. இந்த சந்திப்பின் பின்னரும் இந்த ஹாட்லைன் பாவனையில் இருக்கும் எனவும் அதன் மூலம் எந்தவொரு அரசியல் விவகாரமும் தெளிவாக விவாதிக்கப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே உன் ஆகியோருக்கு இடையே அடுத்த வாரம் நடைபெறவுள்ள சந்திப்பு 1950 களில் இடம்பெற்ற கொரியப் போருக்குப் பின் இடம்பெறும் இருநாட்டு அதிபர்களின் மூன்றாவது சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தனது அணுவாயுதங்களைக் கைவிடுவதாக வடகொரியா அறிவித்த பின்னர் மே மாதம் அல்லது ஜுன் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்புடன் வடகொரிய அதிபர் கிம் சந்தித்துப் பேசவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-4tamilmedia.com