ஜேர்மனின் மத்திய பேர்லினில் 2 ஆம் உலக யுத்தக் குண்டு அகழ்வு : ஆயிரக் கணக்கானோர் வெளியேற்றம்

வெள்ளிக்கிழமை ஜேர்மனியின் தலைநகர் பேர்லினின் மத்திய ரயில்வே நிலையத்தில் 2 ஆம் உலக யுத்தத்தின் போது போடப்பட்ட வெடிக்காத குண்டு அகற்றப் பட்டதால் ஆயிரக் கணக்கான பொது மக்கள் வெளியேற்றப் பட்டனர்.

ஒரு சாதாரண நாளில் இந்த ரயில்வே நிலையம் 300 000 மக்களால் உபயோகப் படுத்தப் படுவது குறிப்பிடத்தக்கது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு போடப் பட்டதாகக் கருதப் படும் இந்த 500 Kg எடை கொண்ட குண்டை பாதுகாப்பாக அகற்றும் பணிக்காக இந்த மத்திய ரயில்வே நிலையத்தின் அனைத்து ரயில், பஸ் மற்றும் டிராம் சேவைகளும் ஒன்று ரத்து செய்யப் பட்டோ அல்லது வேறு வழிகளுக்கு மாற்றப் படவோ செய்யப் பட்டன.

குறித்த மத்திய ரயில் நிலையத்தின் வடக்கே 800 மீட்டர் ஆரை கொண்ட பரப்பளவு  பாதுகாப்பு அற்ற பிரதசமாக அறிவிக்கப் பட்டு குறித்த வெடிகுண்டை அகற்றும் பணி மேற்கொள்ளப் பட்டது. இந்த பாதுகாப்பற்ற பிரதேசத்தில் ரயில் நிலையம், இராணுவ வைத்திய சாலை, பொருளாதார அமைச்சுக் கட்டடம், கலை அருங்காட்சியகம் மற்றும் BND புலனாய்வுப் பிரிவின் தலமைல் காரியாலயம் என்பவையும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்த மிகப்பெரிய வெடிகுண்டு அகற்றும் பணியில் பாதிக்கப் பட்டவர்களுக்காக தற்காலிகத் தங்கும் பாசறைகள் அமைக்கப் பட்டும் இருந்தன. சுமார் 3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பேர்லின் நகரில் 2 ஆம் உலக யுத்த சமயத்தில் போடப்பட்ட 3000 வெடிகுண்டுகள் வரை வெடிக்காது இருக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளதுடன் இவை அவ்வப்போது மிகத் திறமையான வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களால் செயலிழக்கச் செய்யப் பட்டும் வருகின்றன.

-4tamilmedia.com