அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்திவிட்டு, அணுஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.
“ஏப்ரல் 21ஆம் தேதியில் இருந்து அணுஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவுவதையும் நிறுத்துவிடுவதாக” கொரிய மைய செய்தி முகமை தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதியை இலக்காக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது.
தென் கொரியாவின் மூன் ஜே-இன்னை அடுத்த வாரம் சந்திக்க உள்ளார் கிம்.
அது மட்டுமில்லாமல் வரும் ஜூன் மாதம், அமெரிக்க அதிபர் டிரம்பையும் அவர் சந்திக்க உள்ளார்.
“வட கொரியாவிற்கும், ஒட்டு மொத்த உலகிற்கும் இது நற்செய்தி – பெரும் முன்னேற்றம்” என்று தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதிபர் டிரம்ப்.
முன்னதாக, அணு ஆயுத பயன்பாட்டை நிறுத்தினால், வட கொரியாவிற்கு ஒளிமையமான எதிர்காலம் இருக்கும் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
வட கொரியாவின் இந்த அறிவிப்பானது “அர்த்தமுள்ள ஒரு முன்னேற்றம்” என்று தென் கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
கிம் அறிவிப்பின் முக்கியத்துவம்
அணுஆயுதமாக்குதல் அடையப்பட்டதால், இனி ஏவுகணை சோதனைகள் நடத்த வேண்டிய அவசியமல்லை என கிம் கூறகிறார்.
ஆறு அணுஆயுத சோதனைகளுக்கு பிறகு, தற்போதுள்ள மாதிரிகளை மேம்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று வட கொரிய நினைத்திருக்கலாம்.
ஆனால், சர்வதேக சமூகம் கோரியது போல, இது அணுஆயுதங்களை கைவிடுவதல்ல. சோதனை தளங்களை ஒழிக்கப் போவதாக வட கொரியா கூறினாலும், அணுஆயுதங்களை அகற்றுவது குறித்து ஏதும் உறுதியளிக்கப்படவில்லை.
இது மாதிரியான உறுதி மொழிகளை, இதற்கு முன்னரும் வட கொரியா மீறியுள்ளது.
எனினும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பை கிம் சந்திக்க உள்ள நிலையில், இது முக்கியமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. -BBC_Tamil