சிரியாவின் டமாஸ்கஸ் நகரின் அருகே ரசாயன தாக்குதல் நடந்ததாகச் சந்தேகப்படும் இடத்தில் சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவன குழு டூமா நகருக்குப் பயணம் செய்து, அங்கிருந்த மாதிரிகளையும், பிற பொருட்களையும் சேகரித்தனர்.
ஏப்ரல் 7ம் தேதி நடத்தப்பட்ட இந்த ரசாயன வான்வழித் தாக்குதலை சிரியா அரசு நடத்தியுள்ளதாக மேற்குலக நாடுகள் கூறுகின்றன. இதற்குப் பதிலடியாக, சிரியா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல பகுதிகளில் மேற்குலக நாடுகள் குண்டுவீச்சு நடத்தின.
டூமா நகரை தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிரியாவும், ரஷ்யாவும் ரசாயன தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுவதை மறுக்கின்றன.
40க்கு அதிகமானோர் பலியாக காரணமாக இருந்த ரசாயன தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா அரசு தளங்களின் மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.
புதன்கிழமை டூமா நகருக்குள் இந்த குழுவினர் செல்ல இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த சம்பவ இடங்களைச் சோதனை செய்த ஐக்கிய நாடுகள் அவையின் ஆபத்து சோதனை குழுவினர் விடுத்த தாக்குதல் எச்சரிக்கைக்குப் பின்னர், அவர்களின் பயணம் தாமதமாகியது.
பிறகு இறுதியாக, தாக்குதல் நடந்த இரண்டு இடங்களில் ஒரு இடத்தை இக்குழு ஆய்வு செய்தது.
சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட குறிப்பிடப்படாத மாதிரிகள் நெதர்லாந்தின் நிஜ்ஸ்விஜ்க் நகரத்தில் உள்ள ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவனத்தின் ஆய்விடத்திற்கு எடுத்து செல்லப்படும்.
ஆய்வாளர்களால் மற்ற தகவல்களும், பொருட்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. -BBC_Tamil